Published : 15 Apr 2021 11:37 AM
Last Updated : 15 Apr 2021 11:37 AM
''சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றியை நினைத்துப் பெரிதாகப் பூரிப்படையவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கவில்லை. திட்டமிட்டுச் செயல்பட்டோம். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை வைத்திருந்தோம்'' என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் முழுவதும் சன்ரைசர்ஸ் பக்கம் இருந்தது. 115 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு அருகே சன்ரைசர்ஸ் இருந்தது. ஆனால், ஷான்பாஸ் அகமதுவின் ஒரு ஓவரில் ஆட்டம் மொத்தமும் மாறியது. ஒரே ஓவரில் பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, அப்துல் சமத் ஆகியோர் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் முடிவை மாற்றியது. இந்த வாய்ப்பை இறுகப் பற்றிய ஆர்சிபி அணி, தொடர்ந்து நெருக்கடிகளை அளித்து, சன்ரைசர்ஸ் அணியை இலக்கை அடையவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
''நேர்மையாகச் சொல்கிறேன், இந்த வெற்றியால் நாங்கள் உற்சாகத்தின் உச்சிக்கெல்லாம் செல்லவில்லை. எங்களிடம் நல்ல திட்டமிடல் இருந்தது. டெல்லி அணியிலிருந்து ஹர்ஸல் படேலை வாங்கினோம். அவருக்குக் குறிப்பிட்ட பணியை ஒதுக்கி இருக்கிறோம். அவரும் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அணியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை நாங்கள் வைத்துக்கொண்டு விளையாடியது எங்களுக்கு உதவியது. இந்த வெற்றியால் நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற சூழலில் போட்டியைக் கைவிட்டு போனபின்பு ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம். கூடுதலாகப் பந்துவீச்சாளரை வைத்திருந்தது பல வகையில் உதவியது.
நாம் 149 ரன்களை போராடித்தான் எடுத்திருக்கிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று வீரர்களிடம் தெரிவித்தேன். நமக்கு இந்த 149 ரன்கள் சேர்க்கக் கடினமாக இருந்தால், நிச்சயம் எதிரணிக்கும் அது கடினமாகத்தான் இருக்கும். அழுத்தமான, நெருக்கடியான நேரங்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். அதிலும் பந்து பழசாகிவிட்டதால் பந்துவீசக் கடினமாக இருக்கிறது. மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது''.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT