Published : 12 Apr 2021 03:50 PM
Last Updated : 12 Apr 2021 03:50 PM

மைல்கல்லுக்காகக் காத்திருக்கும் கெயில்: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்? சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

கோப்புப்படம்

மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் கேப்டன்களைக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்ஸனும், கே.எல்.ராகுலும் விக்கெட் கீப்பர்கள்தான். ஆனால், ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஜாஸ் பட்லர்தான் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்ளப் போகிறார்.

மும்பை வான்ஹடே மைதானம் சேஸிங் செய்யும் அணிக்கு சொர்க்கபுரி. எத்தனை ரன்கள் அடித்தாலும், அதை சேஸிங் செய்ய அற்புதமான ஆடுகளம். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் ஆட்டமாக அமையும். இரு அணிகளும் முதல் முறையாக மும்பை வான்ஹடே மைதானத்தில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் சீசனில் இரு லீக் ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

இதுவரை இரு அணிகளும் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளன. இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 9 வெற்றிகளையும், பஞ்சாப் 7 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் 406 ரன்கள் குவித்துள்ளார். பஞ்சாப் அணியில் அதன் கேப்டன் கே.எல்.ராகுல் 350 ரன்கள் சேர்த்துள்ளார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுகளையும், பஞ்சாப் அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

கெயிலின் மைல்கல்

பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 349 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் நிகழ்த்தாத சாதனையை கெயில் நிகழ்த்துவார்.

ராகுலின் சராசரி

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 44.26 சராசரி வைத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ராகுலின் ஆட்டம் முக்கியத் துருப்புச் சீட்டாக இருக்கும்

மிரட்டல் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரரும் இங்கிலாந்து வீரருமான ஜாஸ் பட்லர் 157.41 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது இதுதான் முதல் முறையாகும். பவர் ப்ளேவில் 153 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் பட்லர்.

தேறுமா பஞ்சாப்?

2014-ம் ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் முன்னேறியது. அதற்குப் பிறகு தொடர்ந்து 6 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் பஞ்சாப் அணி வெளியேறியது. கடந்த முறை கடைசிக் கட்டத்தில் கடும் போட்டியளித்தாலும், புள்ளிக்கணக்கில் கோட்டைவிட்டது. ஆதலால், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பூரன் அதிரடி

பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரன் நடுவரிசையில் 167 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சேவாக்கிற்கு அடுத்த இடத்தில் நடுவரிசையில் அதிக ஸ்ட்ரைக் ரேட் பூரன் வைத்துள்ளார். சேவாக் 172 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

மோரிஸ் ஜொலிப்பாரா?

ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸைத்தான் ராஜஸ்தான் அணி நம்பியுள்ளது. டி20 போட்டியில் 7.69 எக்கானமியை மோரிஸ் வைத்துள்ளார். ஆனால், ஆர்ச்சர் 6 புள்ளி எக்கானமி மட்டுமே வைத்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கோபால் காத்திருப்பு

ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 2 விக்கெட்டுகள்தான் தேவை. 45 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கோபால் வீழ்த்தியுள்ளார். 7.85 எக்கானமி வைத்துள்ளார்.

பலம், பலவீனம்

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவு. ஆதலால் கிறிஸ் மோரிஸ், ஆன்ட்ரூ டை ஆகியோரைத்தான் நம்பியுள்ளது. தொடக்க வரிசை பேட்டிங் வலுவாக இருந்தாலும், நடுவரிசையில் பலப்படுத்த அனுபவமான பேட்ஸ்மேன்கள் இல்லாதது ராஜஸ்தானின் பெரிய குறை. பென் ஸ்டோக்ஸ் தவிர்த்து திவாட்டியா, ரியான் பராக் இருந்தாலும் அனுபவமில்லாதவர்கள். இந்தத் தொடரில் ஆர்ச்சர் இல்லாததால், ஒரு கை ஒடிந்த நிலையோடுதான் ராஜஸ்தான் களமிறங்குகிறது.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு கடைசி சில போட்டிகளில் மற்ற அணிகளுக்கு விடுத்த சவால் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இந்த முறையும் பஞ்சாப் அணியிடம் அதை எதிர்பார்ப்பார்கள். பேட்டிங்கில் வலுவான வரிசையை பஞ்சாப் கொண்டுள்ளது. முகமது ஷமி இருப்பது பந்துவீச்சில் பெரிய பலம். இதுதவிர புதிதாக விலைக்கு வாங்கப்பட்ட மெரிடித், அக்சர்தீப் சிங் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் இருந்தாலும் அனுபவமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறையாகும். பேட்டிங், பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை விட பஞ்சாப் வலுவாக இருப்பதால் வெற்றியை எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x