Published : 11 Apr 2021 12:16 PM
Last Updated : 11 Apr 2021 12:16 PM
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாகப் பந்துவீசியிருக்க வேண்டும். பனிப்பொழிவு இருந்ததால், 200 ரன்களாவது அடித்திருக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் 190 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வென்றது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா 72, தவண் 85 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். டெல்லி அணிக்கு முதல்முறையாகக் கேப்டன் பொறுப்பு ஏற்ற இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தலைமைக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.
இந்தப் போட்டியின் தோல்விக்குப்பின், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:
பனிப்பொழிவு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து போட்டி முடிவு மாறுபடும். பனிப்பொழிவு இருந்ததன் காரணமாகத்தான் நாங்கள் அதிகமான ஸ்கோர் செய்தோம், ஆனாலும், இந்த ரன் போதாது, 200 ரன்களாவது வந்திருந்தால் ஓரளவுக்கு போராடியிருப்போம்.
அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி நல்ல ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். பந்துவீசிய விதம் மிகவும் மோசமாக இருந்தது.
பவுண்டரி எளிதாக அடிக்கும் விதத்தில்தான் பந்துவீச்சு இருந்தது. அடுத்துவரும் போட்டிகளில் கற்றுக்கொள்வார்கள், அடுத்தடுத்த போட்டிகளில் அதை பயன்படுத்துவார்கள்.
இதுபோன்ற ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும்போது, 200 ரன்களையாவது அடித்திருக்க வேண்டும். போட்டி 7.30 மணிக்குத் தொடங்குமப்போது எதிரணி பந்துவீசும் போது பனிப்பொழிவு குறைவாக இருந்தது. ஆனால், நாங்கள் பந்துவீசும் போது பனிப்பொழிவு இருந்தது.
அதுமட்டுமல்லாமல் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். எங்கள் அணியின் தொடக்க பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பந்துவீசினர், அடுத்தடுத்த போட்டிகளிலும் இதுபோல் வீச வேண்டும்
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT