Published : 10 Apr 2021 12:34 PM
Last Updated : 10 Apr 2021 12:34 PM
ஐபிஎல் “லோகோ” தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸுக்காக ரகசியமாக உருவாக்கப்பட்டதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் வியப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி-20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் அனுபவ பேட்ஸ்மேன் ட்வில்லியர்ஸ் மட்டும் இருந்தார், மறுமுனையில் புதிய வீரர் ஜேமிஸன் இருந்தார்.
டிரன்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களையும், பும்ரா வீசிய 19-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் விளாசி களத்தில் இருந்த ஏபிடி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ஆர்சிபி அணி்யை வெற்றியின் வாசல் வந்து கொண்டு சென்ற ஏபிடி கடைசி ஓவரின் 4-வது பந்தில் ரன் அவுட் ஆகி 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப்பின் எந்தவிதமான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை.
ஆனால் அவர் சந்தித்த முதல் ஆட்டமே நெருக்கடி மிகுந்ததாக இருந்தநிலையில் அனாசயமாக ஆடி அணிக்கு வெற்றியை டிவில்லியர்ஸ் தேடிக்கொடுத்தார். பயிற்சியால் தான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல, இயல்பிலேயே கிரிக்கெட் வீரர் என்பதை டிவில்லியர்ஸ் நிரூபித்துவிட்டார்.
எந்த ஒரு வீரரருக்கும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஃபார்முக்கு வருவதற்கு சில போட்டிகள் தேவைப்படும். ஆனால், டிவில்லியர்ஸுக்கு அதுபோன்ற இடைவெளியே அவசியமே இல்லை. களத்தில் இறங்கியுவுடனே ஃபார்முக்கு திரும்பிவிடுகிறார். ஏபிடியின் நேற்றை ஆட்டமும், ஷாட்களும் அப்படித்தான் இருந்தது.
இதுகுறித்து வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “ கடினமான எதையும் சாதிக்கும் மனவலிமை= டிவில்லியர்ஸ் பவர். அனைத்து சக்திகளையும் டிவில்லியர்ஸ் சக்தி முறியடிக்கும். ஐபிஎல் லோகோ ரகசியமாக டிவில்லியர்ஸுக்காக உருவாக்கப்பட்டதா. டிவில்லியர்ஸ் ஆட்டம் சாம்பியன். ஹர்சல் படேலின் பந்துவீச்சும், ஆர்சிபி பந்துவீசும் அருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
டிவில்லியர்ஸ் சிக்ஸர் அடித்தபோது அவரின் புகைப்படமும், ஐபிஎல் லோகோவில் சிக்ஸர் அடிப்பது போன்ற பொம்மை உருவமும் ஒன்றுபோல் இருந்தது. இதைக் குறிப்பிட்டுத்தான் டிவில்லியர்ஸுக்கு தெரியாமல் ரகசியமாக லோகோவை வடிவமைத்தார்களா என கிண்டலாக சேவாக் கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT