Published : 10 Apr 2021 06:35 AM
Last Updated : 10 Apr 2021 06:35 AM
ஐபிஎல் தொடர் தொடக்கமே அமர்க்களாக அமைந்துள்ளது. முதல் ஆட்டமே ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்துவிட்டது. கடைசிப்பந்துவரை வெற்றி கிடைக்குமா அல்லது சூப்பர் ஓவர் செல்லுமா என எதிர்பார்ப்பை எகிறவைத்துவிட்டது. இதேபோன்று அனைத்துப் போட்டிகளும் சென்றால் ரசிகர்ளுக்க உற்சாகமாக இருக்கும். முதல் போட்டியே இப்படியா என்ற வியக்க வைத்துவிட்டது…
ஹர்சல் படேலின் அற்புதமான 5 விக்கெட், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் வழக்கமான அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்த வெற்றியின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 தோல்விகளை அடைந்த அணி எனும் அவப்பெயருக்கு ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைத்தது. அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்போம் என்ற செண்டிமென்ட் தோல்வி 9-வது முறையாகத் தொடர்கிறது. ஆனால், முதல் போட்டியில் தோற்றபின்புதான் 5 முறை மும்பை சாம்பியன் பட்டம் வென்றதையும் மறந்துவிடக்கூடாது.
ஆடுகளமா இது......
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சர்வதேச தரத்தில் இருக்கிறதா என்ற கேள்விஎழுகிறது. பேட்ஸ்மேன் முழங்காலுக்கு மேல் நேற்று பந்து எழும்பவே இல்லை, உயிரைக்கொடுத்து பந்துவீசினாலும் பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதை எவ்வாறு சர்வேதேச தரத்திலான ஆடுகளம் என ஒப்புக்கொள்வது.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு இருவர்தான் தூண்களாக இருந்தனர். ஒருவர் ஹர்சல் படேல்,மற்றொருவர் ஏபி டிவ்லிலயர்ஸ்.
வெற்றிக்கு காரணம்
ஆனால், இவர்கள் இருவருமே கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவிதமான சர்வதேச போட்டிகளும், முதல்தரப்போட்டிகளும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் களத்துக்கு வந்து சாதித்துள்ளனர்.
அதிலும் ஷைனிக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஹர்சல் டேல் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். டெத் ஓவர்களில் மும்பை அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிவிட்டார். ஸ்லோ பவுன்ஸர், நக்குல் பால், கட்டர்ஸ் என பலவகைகளில் வீசி பாண்டியா சகோதரர்கள், பொலார்ட், இஷான் கிஷன், ஜான்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை படேல் வீழ்த்தினார்.
4 ஓவர்கள் வீசி 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஹர்சல் படேல் சாய்த்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையை ஹர்சல் படேல் பெற்றார். 5 விக்ெகட்டுகளையும் வீழ்த்திய படேல் இக்கட்டான கடைசி நேரத்தில் அணிக்கு ரன்களையும் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆர்சிபி சொத்து
ஏபி டிவில்லியர்ஸை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆர்சிபி அணிக்கு பல முறை ஆபத்பாந்தவனாக வந்து அணியை ஏபிடிதான் கரை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியிலும் அதேகதைதான் நடந்தது.
2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என ஸ்திரமாக இருந்த ஆர்சிபி திடீரென விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என நெருக்கடிக்கு தள்ளப்பட்டது ஆட்டமும் மும்பையின் பக்கம் திசை மாறியது.
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களையும், பும்ரா வீசிய 19-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் விளாசி களத்தில் இருந்த ஏபிடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
ஆர்சிபி அணி்யை வெற்றியின் வாசல் வந்து கொண்டு சென்ற ஏபிடி கடைசி ஓவரின் 4-வது பந்தில் ரன் அவுட் ஆகி 48 ரன்னில் வெளியேறினார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல்படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
உண்மையில் ஆர்சிபி அணிக்கு டிவில்லியர்ஸ் மிகப்பெரிய சொத்து என்பதை நிரூபித்து ஆட்டத்தை ஒற்றை வீரராக நகர்த்திவிட்டார்.
பீல்டிங் மோசம்
ஆர்சிபி அணியைப் பொருத்தவரை நேற்றைய பீல்டிங் மிகவும் மோசாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 3 கேட்சுகளைக் கோட்டைவிட்டனர். இதிலும் குறிப்பாக கிறிஸ் லினுக்கு இரு முறை கேட்சுகளை விட்டனர், இதி்ல் கேப்டன் கோலி ஒரு கேட்சை நழுவவிட்டார், சிராஜ் கையில் விளக்கெண்ணெையை தடவிக்கொண்டு கேட்ச்பிடித்தார்போல் நழுவவிட்டார்.
சில மாற்றங்களைச் செய்ய கோலி முயன்றாலும் அது எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை. வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராகவும் ,இளம் வீரர் பட்டிதாரை 3-வது வீரராக களமிறக்கி கோலி சோதித்தார் இரண்டுமே வெற்றி பெறவில்லை.
சுந்தருக்கு ஏன் ஓவர் வழங்கவில்லை?
நியூஸிலாந்துவீரர் ஜேமிஸன் பந்துவீச்சு நிறைவாக இருந்தது, ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய ஜேமிஸன் கட்டுக்கோப்பாவே பந்துவீசினார். ஐபிஎல் தொடரில் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர் என்று வாஷிங்டன் சுந்தர் இருக்கும் அவருக்கு நேற்று ஒரு ஓவரோடு கோலி நிறுத்தியது ஏன் எனப் புரியவில்லை.
இங்கிலாந்து தொடரிலிருந்து சாஹல் பந்து வீச்சை நொறுக்கி வருகின்றனர், அவருக்கு தொடர்ந்து கோலி ஓவர்களை வழங்குகிறார், சுந்தருக்கு வழங்காதில் என்ன அரசியல் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த ஆட்டத்திலும் சாஹல் 41 ரன்களை வாரி வழங்கினார்.
ரூ.14 கோடி வேலை செய்ததது
ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் நேற்று தனக்கு கொடுக்கப்பட்ட விலை நியாயமானது என நிரூபித்துவிட்டார்.
ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட்டில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி கோலியை குஷிப்படுத்தினார். 28 பந்துகளில் 39 ரன்கள் ேசர்த்து மேக்ஸ்வெல் தனது பங்களிப்பைச் செய்தார். (போன வருஷம்மட்டும் பஞ்சாப் அணிக்கு மட்டும் ஏன் மேக்ஸ்வெல் அப்படி மோசமா விளையாடினிங்க)
மும்பையின் சொதப்பல்
மும்பை அணியைப் பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் கடைசி 4 ஓவர்களில் இதுபோன்று மோசமாக பேட்டிங் செய்ததே இல்லை. கடைசி 4 ஓவர்களில் மட்டும் வெறும் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி.
கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இதில்கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதுபோன்று சடன் கொலாப்ஸ் மும்பை அணி ஆவது பின்னடைவுதான்.
ஆனால்,இதுபோன்ற சறுக்கல்களில் இருந்து எளிதாக வந்துவிடும் மும்பை அணி என நம்பலாம். பேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 20 ரன்களை அடித்திருந்தால், ஆட்டம் மும்பையின் பக்கம் திரும்பி இருக்கும்அதைச் செய்யவில்லை.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி பக்கம் ஆட்டம் சென்றபோது, போல்ட், ஜான்ஸன், பும்ரா மூவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம் கடத்திவிட மும்பை அணி பிரயாசைப்பட்டது தோல்வியில் முடிந்தது. டிவில்லியர்ஸ் எனும் ஆபத்தான பேட்ஸ்மேன் மும்பையிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டார்.
சோதனை முயற்சி தோல்வி
160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சுந்தர்(10), பட்டிதார்(8) என இருவருமை கோலிக்கு நம்பிக்கைஅளிக்கவில்லை. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி.
மேக்ஸ்வெல் அதிரடி
3-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், கோலி ஜோடி அணியை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தினர். ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல், ஆர்சிபி அணி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையளித்தார்.
தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் ரிவர்ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி, ஸ்விச்ஹிட்டில் ஒருசிக்ஸர் என ஸ்கோரை மேக்ஸ்வெல் உயர்த்தினார். கோலியும் அவப்போது பவுண்டரிகள் அடிக்க ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.
பும்ரா வீசிய 13 ஓவரில் கோலி கால் காப்பில் வாங்கி 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்தில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் ஜேன்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஷான்பாஸ் அகமது(1), கிறிஸ்டியன்(1), ஜேமிஸன்(4) என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.
ஆபத்பாந்தவன் ஏபிடி
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. டிவில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கையளிக்கும் விதத்தில் களத்தில் இருந்தார். டிரன்ட் போல்ட் பும்ரா ஓவர்களை விளாசிய ஏபிடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் 48 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் ஏபிடி 48 ரன்கள் சேர்த்து ஏபிடி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல்படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மும்பை அணித்தரப்பில் ஜேன்ஸன், பும்ரா தலா 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தினர்.
சுமார் தொடக்கம்
முன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித், கிறிஸ் லின் கூட்டணி நிலைக்கவில்லை. ரோஹித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். லின், சூர்யகுமார் ஜோடி ஓரளவுக்கு ரன்களைக் குவித்து ஸ்கோரை உயர்த்தினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்து மும்பை அணி.
சூர்யகுமார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 35 பந்தில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இஷான் கிஷன் 28 ரன்னிலும், ஹர்திக் 13 ரன்னிலும் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர்.
விக்கெட் சரிவு
பின்வரிசை வீரர்களான குர்னல் பாண்டியா(7), பொலார்ட்(7) ஜேன்ஸன்(0), சஹர்(0) என வரிசையாக வீழ்ந்தனர். கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. ஆர்சிபி தரப்பில் ஹர்ஸல் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT