Published : 19 Dec 2015 02:42 PM
Last Updated : 19 Dec 2015 02:42 PM
தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தென் ஆப்பிரிக்க நவீன அதிரடி பேட்ஸ்மெனான டிவில்லியர்சைக் கடந்தார் நியூஸிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்.
இவர் தற்போது தொடர்ச்சியாக தனது 99-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தொடர்ச்சியாக 96 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியின் முன்னாள் ‘சுவர்’ ராகுல் திராவிட் தொடர்ச்சியாக 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
டிவில்லியர்ஸ் போலவே மெக்கல்லமும் அனாயாச மட்டைச் சுழற்றல் அதிரடியில் ஈடுபடுபவர் என்றாலும், டிவில்லியர்ஸ் போலவே இவரும் பொறுமை, சீரான திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வீரராவார்.
தற்போது இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் மெக்கல்லம், இதே ஹாமில்டன் மைதானத்தில்தான் 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். டெஸ்ட் வாழ்க்கையின் மிகக் கடினமான விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் என்ற பணியை தனது தோள்களில் வெற்றிகரமாக சுமந்தவர் மெக்கல்லம். அந்த அறிமுகப் போட்டியில் அருமையாக கீப்பிங் செய்ததோடு முதல் இன்னிங்சில் சரளமான முறையில் 57 ரன்களை எடுத்தார் மெக்கல்லம்.
98 டெஸ்ட் போட்டிகளில் மெக்கல்லம் 6,237 ரன்களை எடுத்துள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக முச்சதம் எடுத்து, நியூஸிலாந்து டெஸ்ட் வரலாற்றில் முச்சதம் கண்ட முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். அன்று ஜாகீர் கான் பந்தை ஸ்டியர் செய்து தனது முச்சதத்தை நிறைவு செய்தார் மெக்கல்லம்.
அவரது சராசரி 38.73 என்றாலும், நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மெக்கல்லம்மின் பங்களிப்பு அளப்பறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT