Published : 29 Dec 2015 04:40 PM
Last Updated : 29 Dec 2015 04:40 PM

பார்த்திவ், ஆர்.பி.சிங், பும்ரா அபாரம்: டெல்லியை வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பையை வென்றது குஜராத்

பெங்களூருவில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி குஜராத் கோப்பையைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த குஜராத் கேப்டன்/விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் அற்புதமான அதிரடி 105 ரன்கள் மூலம் 273 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முன்னாள் இந்திய இடது கை பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் மற்றும் பும்ரா ஆகியோரிடம் வீழ்ந்து 134 ரன்களுக்குச் சுருண்டது.

குஜராத் அணிக்காக ஆடும் ஆர்.பி.சிங், அற்புதமான பந்து வீச்சில் ரிஷப் பண்ட், ஷிகர் தவண், கவுதம் காம்பீர், மிலிந்த் குமார் ஆகியோரை தனது தொடக்க ஓவர்களிலேயே வீழ்த்தி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி கேப்டன் காம்பீர் குஜராத்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். சுமார் 150க்கும் மேற்பட்ட லிஸ்ட் ஏ போட்டிகளில் சதம் காணாத பார்த்திவ் படேல் அருமையாக ஆடத் தொடங்கினார். குஜராத் அணி பிரியங் பஞ்சல், பார்கவ் மெராய் ஆகியோரை இழந்து 10 ஓவர்களில் 44/2 என்று இருந்தாலும் ருஜுல் பட் ஆக்ரோஷம் காண்பித்தார். இவர் பட்டியை இறங்கி வந்து ஒரு சிக்சர் அடித்தார், பார்த்திவ் படேலும் ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினார். கட், பிளிக் ஷாட்கள் இவரது பலம். ருஜுல் பட், பார்த்திவ் படேல் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 149 ரன்களைச் சேர்த்தனர்.

பார்த்திவ் படேல் 21 ரன்னிலும் 67 ரன்னிலும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் டெல்லி பீல்டிங் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை. ருஜுல் பட் 60 ரன்களிலும், பார்த்திவ் படேல் 119 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அக்சர் படேல் 6 ரன்களில் சைனியிடம் பவுல்டு ஆனார். ஜுனேஜாவை மனன் சர்மா வீழ்த்தினார். கடைசியில் சி.ஜே.காந்தி 39 பந்துகளில் 4 பவுண்டரிகளூடன் 44 ரன்களையும், கலாரியா 20 பந்துகளில் 21 ரன்களையும் எடுக்க டெல்லி அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இசாந்த் சர்மாவுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட அவர் 9 ஓவர்களில் 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பவன் நெகி 2 விக்கெட்டுகளையும், எஸ்.பட்டி, சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டெல்லி அணிக்காகக் கைப்பற்றினர்.

ஆர்.பி.சிங், பும்ரா ஆக்ரோஷப் பந்துவீச்சு:

டெல்லி அணி இலக்கைத் துரத்த களமிறங்கிய போது ரிஷப் பண்ட்டிற்கு ஆர்.பி.சிங் தனது அற்புதமான முதல் பந்தை வீசினார். ஆஃப் ஸ்டம்பிலிருந்து சற்றே உள்ளே ஸ்விங் செய்தார், பந்து ஸ்டம்பை தொந்தரவு செய்தது. ஷிகர் தவண் ஆக்ரோஷம் என்றால் உடனே மேலேறி வருவது என்ற அசட்டுத்தனமான உத்தியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். ஆர்.பி.சிங் கடுமையாக ஸ்விங் செய்து கொண்டிருக்க அவரை மேலேறி வந்து ஆட நினைத்து கவரில் எளிதான கேட்சுக்கு வெளியேறினார்.

கம்பீரும் ஆர்.பி.சிங்கிடம் எட்ஜ் செய்து வீழ்ந்தார். பிறகு மிலிந்த் குமாரையும் தனது அச்சுறுத்தும் இன்ஸ்விங்கர் மூலம் எல்.பி. செய்ய, ஆர்.பி.சிங் 7-2-23-4 என்று முதல் ஸ்பெல்லில் டெல்லியை காலி செய்தார். 5-வது விக்கெட்டையும் கைப்பற்றியிருப்பார், ஆனால் உள்ளே வந்த பந்து மட்டையின் உள்விளிம்பில் பட ரானா எல்.பி.ஆகாமல் தப்பித்தார்.

டெல்லி அணியில் உன்முக்த் சந்த் 33 ரன்களையும் கடைசியில் பவன் நெகி 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 57 ரன்களையும் எடுத்தனர்.

டெல்லி 32.3 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆர்.பி.சிங் 10 ஓவர்கள் 2 மெய்டன்கள் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 9.3 ஓவர்களில் 1 மெய்டனுடன் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

குஜராத் அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்று சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகனாக பார்த்திவ் படேல், ஆர்.பி.சிங் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x