Published : 08 Apr 2021 06:24 PM
Last Updated : 08 Apr 2021 06:24 PM

மும்பை இந்தியன்ஸ் வீழ்த்த முடியாத அணி இல்லையே: நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம்; சவாலுக்குத் தயாராகும் அஸ்வின் 

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரஅஸ்வின் : கோப்புப்படம்

புதுடெல்லி


மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. 10-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது ரிஷப்பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதல் ஆட்டமே ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே அனல் பறக்கும் விதமாக இருக்கப் போகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தமுறையும் பட்டம் வெல்ல எந்தவிதத்திலும் குறைந்ததாக இல்லை. அதேநேரம் மும்பை அணிக்கு கடினமாக போட்டி அளிக்கும் டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிகளும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குவதால் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வலுவானதாக இருந்தாலும், வீழ்த்த முடியாத அணி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு அணியும் வலுவாகத்தான் இருக்கிறார்கள். நான் சாதுர்யமாகப் பேசவில்லை. மும்பை அணி உண்மையில் வலிமையான அணிதான், அனுபவமான வீரர்களைக் கொண்டிருக்கிறது.

தங்களின் முதல் போட்டியைக் கூட மும்பை அணி வெற்றியுடன் தொடங்கலாம். ஆனால், அதேசமயம், மும்பை அணி வெல்ல முடியாத அணிஅல்ல என்பதையும் சொல்கிறேன்.

இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான சமநிலையுடன் வீரர்கள் இருக்கிறார்கள். அதிலும் கேப்டன் ரிஷப்பந்த் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார் என்பதால், பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகம்.

கடந்த ஆண்டு தொடரின் போது பேட்டிங் சரியான நேரத்தில் ஒன்றுகூடி செயல்படவில்லை. லாக்டவுன் காரணமாகவும், பயோபபுள் சூழல் காரணம் என்பதை புரிந்துகொண்டோம். ஆனால், இந்த ஆண்டு, ரிஷப்பந்த் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார், பேட்டிங்கிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. ஒவ்வொரு அணியும் வீரர்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்துள்ளது, சமநிலையுடன் அணியை அமைத்துள்ளார்கள்.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x