Published : 08 Apr 2021 05:54 PM
Last Updated : 08 Apr 2021 05:54 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) மார்ச் மாத விருதுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான், ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார் சிறப்பாகச் செயல்பட்டார். டி20 தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 6.38 எக்கானமி வைத்த புவனேஷ் ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 4.65 எக்கானமி வைத்திருந்தார். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் புவனேஷ்வர் குமார் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்திலிருந்து மீண்டு வந்த புவனேஷ்வர் குமார் இந்தியஅணிக்கு சிறந்த பங்களிப்பை இங்கிலாந்து தொடரில் வழங்கினார்.
அதேபோல ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகளையும், டி20 தொடரில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்து டி20 தொடர், டெஸ்ட் தொடரை வெல்லக் காரணமாக அமைந்தார்.
ஜிம்பாவே அணி வீரர் சீன் வில்லியம்ஸ், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 264 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 தொடரில் 45 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக் ரேட் 128 ஆக வைத்திருந்தார்.
இந்த மூன்று வீரர்களும் ஆடவர் பிரிவில் மார்ச் மாதத்துக்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் ராவத், தென் ஆப்பிரி்க்க வீராங்கனை லிஸிலே லீ ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
ஆன்-லைன் மூலம் நடக்கும் வாக்கெடுப்பில் அணி நிர்வாகங்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்டோர் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் மாதாந்திர வீரர், வீராங்கனை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT