Published : 08 Apr 2021 04:20 PM
Last Updated : 08 Apr 2021 04:20 PM
அனுபவத்துக்கு எப்போதும் மதிப்பு உண்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இந்தசீசனுக்கு வந்துள்ள பியூஷ் சாவ்லா முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார், இளம் வீரர்களை வழிநடத்துபவராக இருப்பார் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
14-வது ஐபிஎல் சீசன் நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்த முறை ஏலத்தில் சுழற்பந்துவீச்சுப் பிரிவை பலப்படுத்த அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை மும்பை அணி விலைக்கு வாங்கியுள்ளது. ஐபிஎல் அதிகமான விக்கெட் வீழத்திய வீரர்களில் ஒருவராக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார்.
பியூஷ் சாவ்லா வருகை குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ட்விட்டரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடிய காலத்தில் இருந்து பியூஷ் சாவ்லாவுடன் விளையாடி வருகிறேன்.எதிரணியை நிலைகுலையச் செய்யும் பந்துவீச்சாளர் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சை பலப்படுத்த சாவ்லாவை எடுத்தோம்.
அவரை நல்ல விலைக்குதான் வாங்கிதான், அணிக்குள் கொண்டுவந்தோம். ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சாவ்லா. அதிகமான ஐபிஎல் ஆட்டங்களி்ல் சாவ்லா விளையாடியுள்ளார். இந்த போட்டி எவ்வாறு என்பது அவருக்கு தெரியும், எதிரணி வீரர்கள் யார், பலவீனம் என்பதும் தெரியும்.
இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
பியூஷ் சாவ்லா ட்விட்டரில் கூறுகையில் “ எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளார்கள் எனக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. நடப்பு சாம்பியன் அணிக்குள் செல்கிறோம், ஐபிஎல் தொடரில் வலிமையான என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் ஜாகீர் கான் கூறுகையில் “ சாவ்லாவின் அனுபவம் இளம் வீரர் ராகுல் சஹருக்கு நிச்சயம் உதவும். சாவ்லாவின் அனுபவத்தை நாங்கள் மதிக்கிறோம்.வளர்ந்து வரும் ராகுல் சஹருக்கு துணைாயக இருந்து அவரை வழிநடத்துவார். கடினமான காலங்களில், நெருக்கடியான நேரத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை பியூஷ் சாவ்லா அறிந்தவர். சுழற்பந்துவீச்சில் மூத்த வீரர் சாவ்லா என்பதால் அனைத்து சுழற்பந்துவீச்சாளர்களையும் அவர் வழிநடத்துவார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT