Published : 07 Apr 2021 12:23 PM
Last Updated : 07 Apr 2021 12:23 PM
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கரோனா தொற்றிலிருந்து மீண்டநிலையில் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் முறைப்படி இணைந்தார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், அந்த அணியின் மற்றொரு வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான டேனியல் சாம்ஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “ ஆர்சிபி அணியின் இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார். தேவ்தத் படிக்கலுக்கு பிசிசிஐ விதிமுறைகள்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்று தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 22-ம் தேதி படிக்கல் கரோனாவில் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் படிக்கல் இருந்தார். அவருடன் ஆர்சிபி அணியின் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தகவல்தொடர்பில் இருந்து உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர். தேவ்தத் படிக்கலுக்கு தொடர்ந்து எடுக்கப்பட்ட இரு பரிசோதனையிலும் அவருக்கு கரோனாவைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது
கடந்த ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகமான தேவ்தத் படிக்கல் 15 ஆட்டங்களில் 473 ரன்கள் குவித்து அனைவரையும் ஈர்த்தார். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட படிக்கல், ஐபிஎல் தொடரில் சர்வதேச அறிமுகம் இல்லாத ஒரு வீரர் அறிமுக தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் குவிப்பது 2-வது முறையாகும்.
கரோனாவிலிருந்து தேவ்தத் படிக்கல் குணமடைந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயோ-பபுள் சூழலில் முறைப்படி இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன.
வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT