Last Updated : 06 Apr, 2021 06:20 PM

 

Published : 06 Apr 2021 06:20 PM
Last Updated : 06 Apr 2021 06:20 PM

தோனியிடம் கற்றுக்கொண்ட வித்தைகள் அனைத்தையும் சிஎஸ்கேவுக்கு எதிராகப் பயன்படுத்தி வீழ்த்துவேன்: ரிஷப் பந்த் உற்சாகம் 

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த்: கோப்புப் படம்.

மும்பை

தோனியிடம் கற்றுக்கொண்ட வித்தைகள், என்னுடைய சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவேன் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 10-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் வலிமையான சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த் ஏற்றுள்ளார்.

தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணியில் விளையாடியுள்ள ரிஷப் பந்த்துக்கு பல்வேறு நுணுக்கங்களை தோனி கற்றுக் கொடுத்துள்ளார். தோனியின் இடத்தை நிரப்புவாரா ரிஷப் பந்த் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால், தோனியின் வெற்றிடம் மிகப்பெரியது, தோனியோடு தன்னை ஒப்பிட வேண்டாம் என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், டெல்லி கேபிடல்ஸ் அணி வரும் 10-ம் தேதி மோதுகிறது.

இது தொடர்பாக ரிஷப் பந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

''நான் கேப்டனாகப் பதவி ஏற்று முதல் ஆட்டத்திலேயே மகி பாய்க்கு (தோனி அண்ணனுக்கு) எதிராக விளையாட இருக்கிறேன். எனக்கு நிச்சயம் சிறந்த அனுபவமாக அந்தப் போட்டி இருக்கும். தோனியிடம் இருந்து ஏராளமான விஷயங்களை, நுணுக்கங்களைக் கற்று இருக்கிறேன். எனக்கென தனியாகச் சொந்த அனுபவங்கள் இருக்கின்றன.

தோனியிடம் நான் கற்றுக்கொண்ட நுணுக்கங்கள், என்னுடைய சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தோனிக்கு எதிராகப் பயன்படுத்தி, வித்தியாசமான கேப்டன்ஷிப்புடன் சிஎஸ்கே அணியை வீழத்துவேன்.

கடந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி 2-வது இடம் பிடித்தது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லக் கடுமையாக முயல்வோம். எனக்குக் கிடைக்கும் பல வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முயல்வேன்.

கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். சிறப்பாகத் தயாராகி வருகிறோம். ஒவ்வொரு வீரரும் தங்கள் மனதில் கற்பனையோடு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். அதுதான் அணியின் மகிழ்ச்சியான சூழலுக்கு உதவும். கேப்டனாக அதுதான் எனக்குத் தேவை.

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பணி கடந்த 3 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அணிக்குள் புதிய உற்சாகத்தை எடுத்து வந்துள்ளார். ஒரு வீரராகப் பயிற்சியாளரைப் பார்க்கும்போது, அவரிடம் இருந்து அதிகமானவற்றைக் கற்றுக்கொள்ள நினைக்க வேண்டும். அதுபோன்று பாண்டிங் இருக்கிறார்''.

இவ்வாறு ரிஷப் பந்த் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x