Published : 04 Apr 2021 11:59 AM
Last Updated : 04 Apr 2021 11:59 AM

3-வது வீரருக்குத் தொற்று: ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு கரோனா பாதிப்பு

கோப்புப் படம்.

மும்பை

கரோனா வைரஸ் தொற்று ஐபிஎல் தொடரையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே இரு வீரர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடுத்த 10 நாட்களுக்கு அவரால் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்க முடியாது. இதனால் வரும் 9-ம் தேதி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி மோதும் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது

ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிதின் ராணா கரோனாவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்

தேவ்தத் படிக்கல்லுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் 15 ஆட்டங்களில், 473 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சராசரியாக 31.53 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஆதலால், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனாவில் தேவ்தத் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரால் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முஷ்டாக் அலி கோப்பையில் 6 போட்டிகளில் 218 ரன்களை படிக்கல் குவித்து 41 ரன்கள் சராசரி வைத்திருந்தார். விஜய் ஹசாரே கோப்பையில் 7 போட்டிகளில் 737 ரன்கள் குவித்து 147.40 சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x