Published : 03 Apr 2021 03:52 PM
Last Updated : 03 Apr 2021 03:52 PM
ஐபிஎல் டி20 தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 6 இடங்களில் இந்த ஆண்டு ஐபிஎல் லீக் ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அணிக்கும் அதன் சொந்த மாநிலத்தில் போட்டி நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இதில் சிஎஸ்கே அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி ஆகிய அணிகள் மும்பையில் உள்ளன. இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி மும்பை ஹோட்டலுக்கு அக்ஸர் படேல் வந்தபோது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு தெரிந்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களில் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "அக்ஸர் படேலுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அக்ஸர் படேலைக் கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐபிஎல் தொடர் தொடங்கும் முன், கரோனாவில் பாதிக்கப்பட்ட 2-வது வீரர் அக்ஸர் படேல். இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா கரோனாவில் பாதிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. தற்போது, ராணா அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட நிலையான வழிகாட்டுதலின்படி, ஒரு வீரர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், வீரர்களில் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அவருக்கு 9-வது 10-வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். எந்தவிதமான அறிகுறியும் இருக்கக் கூடாது. இந்த விதிமுறை அறிகுறி உள்ள வீரர்களுக்கும், அறிகுறி இல்லாத வீரர்களுக்கும் பொருந்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT