Published : 03 Apr 2021 02:35 PM
Last Updated : 03 Apr 2021 02:35 PM

அதிகரிக்கும் கரோனா: மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் ரத்து? ஹைதராபாத்துக்கு மாற்ற வாய்ப்பு

கோப்புப்படம்

மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மும்பையில் நடக்கும் லீக் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் ஐபிஎல் லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், போட்டிகளை ஹைதராபாத்துக்கு நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. மும்பையில் கரோனா நிலவரத்தையும், மகாராஷ்டிராவில் முழு லாக்டவுன் ஏதும் பிறப்பிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அதேசமயம், ஐபிஎல் தொடர் தொடங்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த முடியும் என பிசிசிஐ நம்புகிறது.

இந்த முறை ஐபிஎல் போட்டிகள் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. எந்த அணிக்கும் அதன் சொந்த மாநிலத்தில் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த் மார்ச் மாதத்திலிருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. நாட்டின் கரோனா பாதிப்புகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிர மாநிலமாகத்தான் இருக்கிறது.

அதிலும் மும்பையில் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் புதிதாக கரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முறை, மும்பையில்தான் சிஎஸ்கே உள்ளிட்ட 4 அணிகளின் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மும்பை வான்ஹடே மைதானப் பராமரிப்பு ஊழியர்கள் 19 பேரில் 10 பேருக்கு திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் பரவல் இல்லையென்றாலும், அவர்களைத் தனிமைப்படுத்தக் கூறி மைதான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்ட அறிக்கையில், " மாநிலத்தில் கரோனா 2-வது அலை உருவாகியுள்ளது. இது முதல் அலையை விட வலுவானதாக இருக்கிறது. ஆதலால், சூழலில் முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில் முழுமையான லாக்டவுன் வரவும் வாய்ப்புள்ளது" என எச்சரித்துள்ளார்.

ஆனால், மகாராஷ்டிரா விதிக்கும் கட்டுப்பாடுகள், லாக்டவுன் விதிகள், பிசிசிஐ, ஐபிஎல் அணிகளுக்கு விதித்துள்ள பயோ-பபுள் சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காது என நம்புகிறது. மும்பையில் அனைத்துப் போட்டிகளும் ரசிகர்கள் இன்றிதான் நடத்தப்பட உள்ளது. மும்பையில் தங்கியுள்ள 4 அணிகளுக்கும் பிரத்யேகமான ஹோட்டல் வழங்கப்பட்டுள்ளது. வெளி ஆட்கள் தொடர்பில்லாமல் வீரர்கள் இருப்பதால், கரோனா பரவலுக்கு வாய்ப்பில்லை என்று நம்புகிறது.

அதே நேரம் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மும்பையில் நடக்கும் ஆட்டங்களை ரத்து செய்து ஹைதராபாத்துக்கு மாற்றுவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக கிரிக் இன்போ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x