Published : 02 Apr 2021 06:55 PM
Last Updated : 02 Apr 2021 06:55 PM
நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம் ஆகியோர் இன்று காலை சென்னை வந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார்கள்.
2021 ஐபிஎல் சீசனில் மும்பை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்கி பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஆனால், இன்னும் மும்பையிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வரவில்லை.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவதற்காக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம் ஆகியோர் இன்று காலை சென்னை வந்தனர். இவர்கள் மூவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டபின், அணியின் பயோபபுள் சூழலுக்குள் செல்வார்கள்.
கடந்த ஐபிஎல் சீசனில் டிரன்ட் போல்ட் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து, 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3-வது இடத்தைப் பெற்றார். அதேசமயம், சமீபத்தில் நியூஸிலாந்து டி20 அணியில் இடம் பெற்றிருந்த நீஷம் சில வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தார்.
நியூஸிலாந்து அணியின் வருகை குறித்து மும்பை இந்தியன்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " தேசிய அணிக் கடமையை முடித்துவிட்டு, ஐபிஎல் கடமைக்கு வந்துவிட்டார்கள். மூன்று வீரர்களும் சென்னை வந்துவிட்டனர். டிரன்ட், ஆடம், ஜிம்மியை வரவேற்கிறோம்"எனத் தெரிவித்துள்ளனர்.
வரும் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் காண்கிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் பெரும்பாலான வீரர்களை மாற்றவில்லை.
சிஎஸ்கே அணி, ஆர்சிபி அணி, மும்பை அணி ஆகியவை வலுவாக இருப்பதால், 3 அணிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன் அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஆதித்யா தாரே, அன்குல் ராய், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் பொலார்ட, குர்னல் பாண்டியா, மோஸின் கான், குயின்டன் டீ காக், ராகுல் சஹர், சவுரவ்திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரன்ட் போல்ட், ஆடம் மில்னே, நாதன் கூல்டர் நீல், பியூஷ் சாவ்லா, ஜிம்மி நீஷம், யுத்விர் சாரக், மார்கோ ஜான்ஸன், அர்ஜுன் டெண்டுல்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT