Published : 24 Nov 2015 03:03 PM
Last Updated : 24 Nov 2015 03:03 PM
ஷிகர் தவண் ஆட்டம் குறித்து ரசிகர்களிடையே சோர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர் ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் இட்டுள்ளார் என்கிறார் முரளி விஜய்.
நாளை நாக்பூரில் 3-வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ராகுலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஷிகர் தவணுக்கு விராட் கோலி ஏற்கெனவே தன் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் 40 ரன்களுக்கும் மேல் டெஸ்ட் சராசரி வைத்துள்ள ஒருவரை ஓரிரு டெஸ்ட் போட்டி தோல்விகளைக் கொண்டு அறுதியிட முடியாது என்று கூறியுள்ளார்.
தற்போது முரளி விஜய்யும், ஷிகர் தவண் பெரிய ஸ்கோர் ஒன்றுக்கான அடித்தளம் அமைத்துள்ளார் என்றும் ‘இதோ வந்து விடும் அந்த பெரிய ஸ்கோர்’ என்ற விதமாகவும் தவணுக்கு ஆதரவளித்துள்ளார். மும்பை மிட் டே பத்திரிகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே புள்ளி விவரங்கள் ரீதியாக தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் நம்பத்தகுந்த ஒரு ஜோடியாக முரளி விஜய் மற்றும் புஜாரா எழுச்சியுற்றுள்ளனர்.
ஜனவரி 2013 முதல் விஜய்-புஜாரா சேர்ந்து 25 இன்னிங்ஸ்களில் 1486 ரன்களைக் குவித்துள்ளனர். சராசரி 59.44 என்பது மிக வலுவான ஒன்றாகும். இதில் 3 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அணியின் சிறந்த ஜோடியாக இவர்களே சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இதில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விஜய் (167), புஜாரா (204), ஜோடி சேர்ந்து 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த சாதனை 370 ரன்களும் அடங்கும். அந்தப் போட்டியில் சேவாக் 6 ரன்களுக்கு சிடிலிடம் வெளியேற, 17/1 என்ற நிலையிலிருந்து விஜய்-புஜாரா ஜோடி ஸ்கோரை 387 ரன்களுக்கு உயர்த்தினர். ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி தழுவியது.
இந்த 370 ரன்கள் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப் உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2-வது விக்கெட்டுக்காக அதிக ரன்களைச் சேர்த்த உலக சாதனையை சனத் ஜெயசூரியா-மஹாணாமா ஜோடி வைத்துள்ளனர். இவர்கள் 1997-ம் ஆண்டு தொடரில் இந்தியாவுக்கு எதிராக கொழும்புவில் 2-வது விக்கெட்டுக்காக 576 ரன்கள் சேர்த்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT