Published : 16 Nov 2015 08:27 PM
Last Updated : 16 Nov 2015 08:27 PM

மணிக்கு 160.4 கிமீ வேகத்தில் வீசினாரா ஸ்டார்க்?- விவாதமும் சர்ச்சையும்

பெர்த் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்று மணிக்கு 160.4 கிமீ வேகம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சில விவாதங்களும் சர்ச்சையும் கிளம்பியுள்ளன.

290 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லருக்கு வீசப்பட்ட ஒரு பந்து 160கிமீ வேகத்துக்கு சற்றே அதிகமானது என்று காட்டப்பட்டது.

இது குறித்து ஆஸ்திரேலிய செய்தி ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வந்த செய்தி வருமாறு:

15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரெட் லீ மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் மணிக்கு 161.8 கிமீ வேகம் வீசி சாதனை புரிந்ததாக கூறப்பட்டது.

கார்ட்னி வால்ஷை பெவிலியன் அனுப்பிய அந்தப் பந்து வீசப்பட்ட பிறகு மைதானத் திரையில் 161.8 கிமீ வேகம் என்று காட்டப்பட்டது. ஆனால் வர்ணனையாளரகளிடத்தில் இது எந்த வித எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை. பிரெட் லீ வீசிய மற்ற பந்தை விடவும் இந்த குறிப்பிட்ட பந்து வேகமானது என்று கூற முடியவில்லை என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

அதனால் பிரெட் லீ-யின் அந்தக் குறிப்பிட்ட பந்தின் வேகம் மணிக்கு 161.8 கிமீ என்பதையும், இது வேகப்பந்து வீச்சின் அதிவேக பந்துக்கான உலக சாதனை என்பதையும் அங்கீகரிக்கவில்லை.

அதை அங்கீகரித்திருந்தால் பிரெட் லீ-தான் இன்று அதிவேகப் பந்தை வீசிய வேகப்பந்து வீச்சுக்கான சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்திருப்பார்.

இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு பந்து 160.4 கிமீ வேகம் என்று காட்டியது. ஆனால் வேகத்தை அளக்கும் கருவி சரியானதுதானா, துல்லியமானதுதானா என்ற விவாதம் எழுந்தது.

ஆனாலும் இந்த ஸ்டார்க் விவகாரத்திலும் அந்தக் குறிப்பிட்ட பந்து அதிவேகமாக சென்றதாக திருப்திகரமாக, ஐயமற நிரூபிக்கப் பட முடியவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் பிரையன் மெக்மில்லன் கூறும்போது, “நேரலை நிகழ்ச்சி தயாரிப்பில் இருந்த யாராவது ஒருவர் கேளிக்கைக்காக வேண்டி இதனைச் செய்திருக்கலாம். சானல் 9 பயன்படுத்தும் ஸ்பீட் கன்னின் துல்லியம் குறித்து நமக்கு தெரியவில்லை. இந்தப் பந்து எங்கிருந்தோ திடீரென வந்தது. இது இன்றைய தினம் வீசிய மற்ற ஸ்டார்க் பந்துகளிடையே எந்தவித வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. இவையனைத்தும் மணிக்கு 150 கிமீ வேகத்துக்கு அருகிலேயே இருந்தன. எதற்காக தவறான பொத்தான் அமுக்கப்பட்டது என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை” என்றார்.

இதனையடுத்து மெக்மில்லன் கருத்துக்கு பதில் அளித்த மிட்செல் ஸ்டார்க், “அவர் நாளையே என் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ளட்டும்” என்றார்.

இதுவரை கூறப்பட்ட அதிவேக பந்துகள் விவரம்: ஆன்டி ராபர்ட்ஸ் 159.5 கிமீ (டெஸ்ட் போட்டிகள்), ஷோயப் அக்தர் 161.3கிமீ (ஒருநாள் போட்டிகள்), ஷான் டெய்ட் 161.1 கிமீ, பிரெட் லீ 161.1 கிமீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x