Published : 05 Nov 2015 06:08 PM
Last Updated : 05 Nov 2015 06:08 PM

இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்ற பாகிஸ்தான் 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்

ஷார்ஜாவில் நடைபெற்ற 3-வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை, பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றிய பாகிஸ்தான் டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்துக்குச் சரிவு கண்டது.

284 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய இங்கிலாந்து 5-ம் நாளான இன்று தன் இரண்டாவது இன்னிங்ஸில் 156 ரன்களுக்குச் சுருண்டது. யாசீர் ஷா 4 விக்கெட்டுகளையும், ஷோயப் மாலிக் 3 விக்கெட்டுகளையும், சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்சில் அருமையான 72 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, பாகிஸ்தானை 2-வது இன்னிங்சில் 355 ரன்கள் எடுக்க அனுமதித்தது. சில பல கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. இதனால் ஹபீஸ் 151 ரன்களைக் குவித்தார். இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு நேரத்தில் பாகிஸ்தான் 152/4 என்று இருந்தது, அப்போது நெருக்கி 200 ரன்களுக்குள் பாகிஸ்தானை இங்கிலாந்து சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்திடமிருந்து வெற்றியைப் பறித்தது ஹபீஸின் இன்னிங்ஸ் என்றால் மிகையாகாது.

ஆட்ட நாயகனாக மொகமது ஹபீஸும், தொடர் நாயகனாக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லெக் ஸ்பின்னர் யாசிர் ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது.

அலிஸ்டர் குக் மட்டுமே இந்தத் தொடரில் பாகிஸ்தானை என்ன சேதி என்று கேட்டார், இன்றும் கூட 63 ரன்களுக்கு போராடி 9-வது வீரராக அவர் ஆட்டமிழந்தார்.

46/2 என்று இங்கிலாந்து இன்று தொடங்கி முதல் ஒரு மணி நேரத்தில் 5 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ஆடிய விதத்தினால் ஏற்பட்ட தோற்றத்தின் அளவுக்கு பிட்ச் மோசமாக இல்லை என்பது முக்கியமானது. இந்த போட்டியில் ஷோயப் மாலிக் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்றால் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் பற்றி வேறு என்ன கூற முடியும்?

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் சுழற்பந்து வீச்சுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து. ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மெனாகக் கருதப்படும் ஜோ ரூட் (6) இன்று காலை யாசிர் ஷாவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். இது நடந்தது இன்று ஆட்டம் தொடங்கிய பிறகான 4-வது பந்தில். ஜேம்ஸ் டெய்லர் (2), சுல்பிகர் பாபர் பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார். பேர்ஸ்டோ, படேல் இருவரும் ரன் எடுக்காமல் யாசீர் ஷா மற்றும் சுல்பிகர் பாபரிடம் வீழ்ந்தனர். பிறகு ஒன்றும் இங்கிலாந்துக்கு கூறிக்கொள்ளும் படியாக இல்லை. காயமடைந்த பென் ஸ்டோக்ஸ் கடைசியாக இறங்கி 12 ரன்கள் எடுத்து யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார். 60.3 ஓவர்களில் 156 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.

ஆஷஸ் தொடர் மட்டுமே தாங்கள் ஆடக்கூடிய மதிப்பு மிக்க கிரிக்கெட் என்ற எண்ணம் இங்கிலாந்து வீரர்களை விட்டு அகலவில்லை, அதனால்தான் ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வச் செய்த பிறகு இப்படியொரு தோல்வியை அந்த அணி சந்திக்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x