Published : 29 Mar 2021 06:47 PM
Last Updated : 29 Mar 2021 06:47 PM
தோனியின் கேப்டன்ஷிப்பில் பந்துவீச வேண்டுமென்றால் எந்தப் பந்துவீச்சாளரும் குஷியாகிவிடுவார்கள். ஏனென்றால், பந்துவீச்சாளர்களின் வலிமை என்னவென்று தெரிந்து அவர்களிடம் இருந்து சிறப்பான பந்துவீச்சை தோனி வெளிக்கொண்டுவருவார் என்று சிஎஸ்கே வீரர் கிருஷ்ணப்பா கவுதம் பெருமையுடன் தெரிவித்தார்.
கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கிருஷ்ணப்பா கவுதம் இந்த முறை, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 8ம் தேதி முதல் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டது. ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும்14-வது ஐபிஎல் தொடருக்காக மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியத் தொடரில் காயமடைந்த ரவிந்திர ஜடேஜா, கடந்த தொடரில் விளையாடாத சுரேஷ் ரெய்னா, புதிதாக அணிக்கு வந்துள்ள உத்தப்பா ஆகியோர் மும்பையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்துவிட்டனர்
மும்பையில்தான் இந்தமுறை சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டிகள் அனைத்தும் நடக்க உள்ளன. ஏப்ரல் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர் கிருஷ்ணப்பா கவுதம் சிஎஸ்கே இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தோனியின் கேப்டன்ஷிப்பில் பந்துவீச வேண்டுமென்றால் எந்த பந்துவீச்சாளரும் குஷியாகிவிடுவார்கள். ஏனென்றால், பந்துவீச்சாளரின் பலம் என்ன என்பதை அறிந்து அவரிடம் இருந்து சிறந்த பந்துவீச்சை தோனி வெளிக்கொண்டு வருவார்
தோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு அது நிறைவேறிவிட்டது. மிகப்பெரிய சாம்பியன் அணியான சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளோம், என்னிடம் இருந்து அதிகமான திறமைகளை எதிர்பார்ப்பார்கள் என்ற எந்தவிதமான அழுத்தமும் இல்லை.
ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கே அணி வேறுபட்டு இருப்பது என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறை, சிந்தனை முறை ஆகியவைதான்.
சிஎஸ்கே நிர்வாகம் நீண்டகாலமாக கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு வீரர்களை எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு பேச வேண்டும், ஏதாவது சரியாகச் செல்லாவிட்டால் எவ்வாறு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பது தெரியும்.
ஒரு வீரர் சுதந்திரமாக தங்களின் கருத்துக்களைக் கூற முடியும், வெளிப்படுத்த முடியும் என்பது மற்ற அணிகளில் இருந்து மிகப்பெரிய வித்தியாசம். ஒரு வீரருக்கு ஏதாவது குறிப்பிட்ட தேவையென்றால் தனிப்பட்ட முறையில் நிர்வாகத்தினர் பேசுவார்கள், அவர்களுக்குத் தேவையானதை வழங்குவார்கள். இதுபோன்ற கனிவான கவனிப்புகள், வீரர்களைக் கவலையின்றி செயல்பட வைக்கும், சிறப்பான பங்களிப்பை வழங்க உதவும்.
இவ்வாறு கவுதம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT