Published : 29 Mar 2021 12:47 PM
Last Updated : 29 Mar 2021 12:47 PM
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று முடிந்ததையடுத்து, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நேற்று இணைந்தனர்.
ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கான பயிற்சியைத் தொடங்கும் பொருட்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் மூவரும் நேற்று இரவு இணைந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த மூவரும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றிக்குப் பின், மூவரும் விமானம் மூலம் மும்பை வந்து, மும்பை இந்தியன்ஸ்அணியுடன் பயோ-பபுள் சூழலுக்குள் இணைந்தனர்.
ஏற்கெனவே இந்த மூன்று வீரர்களும் இந்திய அணியில் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் செல்லும்போது தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று பிசிசிஐ வழிகாட்டி நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக், குர்னல், சூர்யகுமார் ஆகிய 3 வீரர்களும் இணைந்தது குறித்து அந்த அணி நிர்வாகம் வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. குர்னல் பாண்டியா முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். டி20 தொடரில் சூர்யகுமார் அறிமுகமானார். ஒருநாள் தொடரில் சூர்யகுமார் இடம் பெற்றபோதிலும் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடக்கிறது. ஏப்ரல் 9-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி வீரர்கள் அனைவரும் சேர்ந்தவுடன் அடுத்த சில நாட்களில் சென்னை வருவார்கள் எனத் தெரிகிறது.
சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில், "இந்திய அணிக்காக நான் விளையாடியது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவது என் கனவாக இருந்தது. மிகப்பெரிய இந்திய அணியில் இணைந்து நான் விளையாடியது அற்புதமான தருணம். இப்போது அந்தப் பணி முடிந்துவிட்டது. அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் குடும்பத்துக்குள் வந்துவிட்டேன். அடுத்து மிகப்பெரிய தொடரை எதிர்நோக்கி இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT