Published : 27 Mar 2021 05:01 PM
Last Updated : 27 Mar 2021 05:01 PM
40 ஓவர்கள் வரை பாதுகாப்பாக விளையாடும் இந்திய அணியின் எச்சரிக்கையான மனநிலையால், 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மிகப்பெரிய விலை கொடுக்கக் காத்திருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் விமர்சித்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு பாணியைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. அதாவது, தொடக்கத்திலிருந்தே அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்க்கிறது. 40 ஓவர்களில் இருந்துதான் காட்டடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்க்கிறது.
இந்த அணுகுமுறையைத்தான் ஆஸ்திரேலியத் தொடரிலும் பின்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பின்பற்றி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் 112 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 126 ரன்களும் இந்திய அணி சேர்த்தது.
இந்திய அணியின் இந்த அணுகுமுறை பெரும்பாலான ஆட்டங்களில் கைகொடுத்தாலும், விக்கெட் இல்லாத சூழலில் மோசமான விளைவுகளைக் கொடுத்துவிடும்.
ஆனால், இங்கிலாந்து அணி அந்தப் பாணியைப் பின்பற்றுவதில்லை. தொடக்கத்திலிருந்தே அதிரடியாகத்தான் ஆரம்பிப்போம், கடைசி வரை ஆக்ரோஷமாக விளையாடி ரன்களைச் சேர்ப்போம் என்று முடிவு செய்து களமிறங்குகிறது. முதலில் பேட்டிங் செய்தாலும் இந்தப் பாணிதான், சேஸிங் செய்தாலும் இந்தப் பாணிதான்.
இந்தப் பாணியில் விளையாடித்தான் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 336 ரன்களை எளிதாக இங்கிலாந்து அணி சேஸிங் செய்தது. ஆனால், இந்த அணுகுமுறை தவறானது. எச்சரிக்கையுடன் விளையாடும் இந்திய அணியின் மனநிலைக்கு எதிர்காலத்தில் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மைக்கேல் வான் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு ஒரு பாடமாக அமைந்தது. 40 ஓவர்கள் எச்சரிக்கை உணர்வோடு, விக்கெட் விழாமல் விளையாடும் அணுகுமுறை, 2023-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியின்போது இந்திய அணியை மிகப்பெரிய விலை கொடுக்க வைக்கும்.
இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் 375 ரன்களை எட்ட முடியும். ஆனால், அவ்வாறு விளையாடுவதில்லை. இங்கிலாந்து அணி மட்டுமே அந்த ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT