Published : 26 Mar 2021 06:34 PM
Last Updated : 26 Mar 2021 06:34 PM
கே.எல்.ராகுலின் பிரமாதமான சதம், ரிஷப் பந்த்தின் அசுரத்தனமான பேட்டிங், கோலியின் பொறுமை ஆகியவற்றால் புனேவில் பகலிரவாக நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்கம் சிறப்பாக இல்லாத நிலையில், நடுவரிசையில் ராகுல், கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் ஆகியோரின் பேட்டிங் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தியது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 5-வது சதத்தை நிறைவு செய்து 114 பந்துகளில் 108 ரன்கள்(2 சிக்ஸர்,7 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
டி20 போட்டிகளில் 1, 0, 0, 14 ரன்கள் என சொதப்பிய ராகுலின் ஆட்டம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கு இந்த ஆட்டத்தில் அவர் பதில் அளித்துள்ளார்.
ராகுலுக்குத் துணையாக ஆடிய இளம் வீரர் ரிஷப் பந்த் அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஏறக்குறைய 416 நாட்களுக்குப் பின் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பந்த் மதயானை போல் ஆடி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
28 பந்துகளில் அரை சதம் அடித்த ரிஷப் பந்த், 40 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். ரிஷப் பந்த்தின் ஸ்ட்ரைக் ரேட் 192 ஆக இருந்தது. ரிஷப் பந்த் தனது ஸ்ட்ரைக் ரேட்டை 200க்குக் குறையாமல் பேட் செய்த நிலையில் கடைசி நேரத்தில்தான் குறைந்தது.
விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி 121 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார். கே.எல்.ராகுல் இரு வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியதுதான் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம்.
கே.எல்.ராகுலின் இந்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு 5-வது சதமாகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-வது சதமாகவும் அமைந்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ரோஹித் சர்மா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தவண், இந்த ஆட்டத்தில் டாப்ளே வீசிய 4-வது ஓவரில ஸ்லிப்பில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். ரோஹித் சர்மா பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். சாம் கரன் வீசிய 9-வது ஓவரில் பேக்வேர்ட் ஸ்குயர் திசையில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 37 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். கோலி 35 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரஷித் பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பட்லர் தவறவிட்டார்.
பொறுமையாக பேட் செய்த விராட் கோலி, 62 பந்துகளில் தனது 62-வது அரை சதத்தை நிறைவு செய்தார். கோலிக்கு ஒத்துழைத்து ராகுலும் கட்டுக்கோப்பாக பேட் செய்து 66 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார்.
அதில் ரஷித் வீசிய 32-வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் பந்துவீச்சில் 9-வது முறையாக கோலி ஆட்டமிழந்தார். ராகுல், கோலி இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். இதன்பின்புதான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ரஷித் பந்துவீச்சில் முதல் சிக்ஸரை அடித்து ரிஷப் பந்த் தனது அதிரடியைத் தொடங்கினார். அதன்பின் இங்கிலாந்து பந்துவீச்சை ரிஷப் பந்த் பொளந்து கட்டினார்.
குறிப்பாக ஸ்டோக்ஸ் வீசிய 41-வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாசி ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
ராகுலும் தனது பங்கிற்கு பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 108 பந்துகளில் ராகுல் தனது 5-வது சதத்தை நிறைவு செய்தார்.
அதன்பின் டாம் கரன் பந்துவீச்சில் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்களில் வெளியேறினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்துடன் சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு இரு சிக்ஸர்களை விளாசினார். இருவரின் காட்டடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது.
ரிஷப் பந்த் 77 ரன்களில் டாம்கரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். குர்னல் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரன், டாப்ளே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT