Last Updated : 29 Nov, 2015 01:56 PM

 

Published : 29 Nov 2015 01:56 PM
Last Updated : 29 Nov 2015 01:56 PM

இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்: உள்ளூர் சாதகம் என்னும் பொன் முட்டையிடும் வாத்து

இந்திய மண்ணில் இந்தியாவுக்கு அதிக சவால்களை ஏற்படுத்திவரும் அணி தென்னாப்பிரிக்காதான். உலகின் எல்லா அணிகளையும் மிரட்டிவந்த 1990களின் ஆஸ்திரேலிய அணிகூட இந்தியாவில் திணறியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகிலேயே சிறந்த அணியாகக் கருதப்பட்டது. அந்த அணிகூட இந்தியாவில் தோற்றுத்தான்போனது. ஆனால் கிட்டத்தட்ட அதே சமயத்தில் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க அணி அனாயாசமாகத் தொடரை வென்றது.

அதன் பிறகும் ஒரு முறைகூட இந்தியாவில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை. கடந்த 9 ஆண்டுகளாக எந்த வெளிநாட் டிலும் தொடரை இழக்காத பெருமையுடன் இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா தொடரை இழந்து நிற்கிறது.

இளம் இந்திய அணிக்கு இது பெருமைக்குரிய தருணம்தான். இலங்கையில் பெற்ற வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது சாதனைதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் முதலிடத்தில் இருக்கும் அணியை வெற்றி காண்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அந்த வெற்றி எப்படி வந்தது என்பதைப் பார்க்கும்போது அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

இந்தியா வென்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிட்டன. முதல் நாள் முதல் ஓவரிலிருந்தே பந்து சுழலும் வண்ணம் ஆடுகளம் தயாரிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்தியாவின் அனுபவம் மிகுந்த சுழலர்களின் மும்முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க மட்டையாளர்கள் வீழ்ந்தார்கள். சுழலைச் சமாளித்து ஆடுவதில் கூடுதல் அனுபவம் உள்ள இந்திய மட்டையாளர்களும் திணறினாலும் எதிரணியைக் காட்டிலும் சற்று மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றி வசமானது.

வெளி மண்ணில் ஆடுவதன் சவால்

டெஸ்ட் போட்டிகளில் உள்ளூர் சாதகம் என்னும் அம்சம் இயல் பானதுதான். இந்த அம்சத்தால்தான் ஒவ்வொரு அணியும் வெளி மண்ணில் பெறும் வெற்றிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் களங்கள் பொதுவாக வேகப் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். இங்கிலாந்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகும்.

இந்தியா, இலங்கை போன்ற துணைக் கண்டத்து ஆடுகளங்கள் பொது வாகச் சுழல் பந்துக்குச் சாதகமாக இருக்கும். சுழல் ஆடுகளங்களில் ஆடிப் பழகிய துணைக்கண்டத்து ஆடக்காரர்கள் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஆடுகளங்களில் திணறுவதுபோலவே அவர்கள் இங்கே வந்தால் தடுமாறுவது இயல்புதான். உள்ளூரில் ஆடும் அதே சூழல் வெளிநாடுகளிலும் கிடைக்கும் என்றால் வெளி மண்ணில் ஆடுவதன் சவால் குறைந்து சுவாரஸ்யம் அடிபட்டுப் போகும்.

உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான ஆடுகளங்கள் இருப்பது ஆட் டத்தை ஒற்றைப் பரிமாணம் கொண் டதாக ஆக்கிவிடும். எனவே இந்தியாவில் சுழல் பந்துக்குச் சாதகமான களங்களை அமைப் பதில் தவறேதும் இல்லை.

ஆனால் இங்கே சில கேள்வி கள் எழுகின்றன. சுழல் பந்துக்குச் சாதகம் என்றால் எந்த அளவுக்கு? 200 ரன் அடித்தாலே பெரிய விஷயம் என்னும் அளவுக்கா? முதல் பந்திலிருந்தே கன்னா பின்னாவென்று பந்து சுழன்றும் கணிக்க முடியாத வகையில் எழும்பியும் தாழ்ந்தும் வரும் அளவுக்கா? ஒரே நாளில் 20 விக்கெட்கள் விழும் அளவுக்கா? ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை எதிர்பார்க்கலாம் என்னும் அளவுக்கா? 20 ஓவர் போட்டிகளைக் காட்டிலும் டெஸ்ட் போட்டியில் குறைவான ரன் வரும் அளவுக்கா?

டெஸ்ட் போட்டியைப் பொறுத்த வரை எந்தக் களமாக இருந்தாலும் பந்துக்கும் மட்டைக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பெர்த் ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்குப் பேர்போனது. ஆனால் அங்கே ஆடத் தெரிந்தவர்களால் ரன்களையும் குவிக்க முடியும். இந்திய மட்டையாளர்கள் இதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இதே களத்தில் இந்தியா நன்கு ஆடி வெற்றி பெற்றதும் உண்டு.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் போன்ற களங்களும் அப்படியே. இங்கெல்லாம் பந்து ஸ்விங் ஆகும் என்றாலும் இவை ஆடவே முடியாத களங்கள் அல்ல. ஆஸ்திரேலியாவின் சிட்னி போன்ற களங்கள் மூன்றாம் நாளுக்குப் பிறகு சுழல் பந்துக்குச் சாதகமாக மாறும். இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற களங் களில் மட்டைக்கும் பந்துக்குமான போட்டி கிட்டத்தட்ட சமமான அளவில் இருப்பது வழக்கம். மூன்று நாட்களில் போட்டி முடிவ தெல்லாம் அரிதான நிகழ்வுகளாகவே இருக்கும்.

ஏதேனும் ஒரு அணி அபாரமாக ஆடினால்தான் இது சாத்தியமாகும். இரண்டு அணிகளுமே மட்டை பிடிக்கத் திணறுவதன் மூலம் இப்படி நிகழ்ந்தால் போட்டி பந்து வீச்சாளர் களுக்கு மட்டுமேயானதாக மாறிச் சமநிலை இழக்கிறது.

ஆட்டத்தின் அழகு

இரு அணிகளும் தலா 500, 600 ரன்கள் குவித்து டிரா ஆகும் போட்டிகள் அலுப்பூட்டுகின்றன என்றால் மூன்றே நாட்களில் முடியும் டெஸ்ட் போட்டிகளும் சலிப்பூட்டத்தான் செய்கின்றன. எல்லாப் போட்டிகளும் ஐந்து நாட்களுக்கு நீடித்தால்தான் அது நல்ல டெஸ்ட் என்பதல்ல. ஆனால் 200 ரன் அடித்தாலே போதும் என்ற நிலை இருப்பதும் நல்ல டெஸ்டுக்கான இலக்கணமல்ல.

எழுதிவைத்த நாடகப் பிரதியை நிகழ்த்துவதுபோல டெஸ்ட் போட் டிகள் அரங்கேறுவது ஆட்டத்தின் அழகைக் குறைத்துவிடுகிறது. அடுத்தபடியாக என்ன நடக்கும் என்பது தெரியாததே கிரிக்கெட்டின் மகத்தான அழகு. இதுபோன்ற களங்கள் அந்த அழகைக் குலைத்து விடுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு சவால்கள் நிலவும். நான்காவது, ஐந்தாவது நாட்களில் களத்தின் போக்கு மாறும். போட்டி யின் திசை மாறும். இதையெல்லாம் 20 ஓவர் போட்டிகளில் நான்கைந்து ஓவர்கள் நன்றாக ஆடுபவர் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார்.

ஒரு நாள் போட்டிகளில் ஒரு சதம் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். டெஸ்ட் போட்டியில் ஒருவர் முச்சதம் அடிப்பதுகூட வெற்றிக்கு உத்தரவாதமாக அமைந்துவிடாது. ஐந்து நாட்களும் ஆட்டத்தின் தீவிரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் படைத்த அணியால்தான் டெஸ்ட் போட்டியில் வெல்லவோ ஆதிக்கம் செலுத்தவோ முடியும். மொஹாலி, நாகபுரியில் அமைந்தது போன்ற ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிக்கே உரிய இந்த உயிர்ப்பைச் சிதைத்துவிடுகின்றன.

நாகபுரி போட்டி நடந்த அதே சமயத்தில் அடிலெய்டில் வரலாற்றின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இங்கும் சுமார் 200 ரன்களுக்கு இரு அணிகளும் ஆட்டமிழந்தன. ஆனால் 200 ரன் எடுத்தால் போதும் என்னும் நிலை இல்லை. அடுத்து என்ன நடக்குமோ என்பது தெரியாத சூழலே நிலவுகிறது. இதுவே டெஸ்ட் போட்டியின் தன்மை.

வெற்றி பெறுவது முக்கியம் தான். ஆனால் அதற்கான முயற்சியில் டெஸ்ட் போட்டியின் வசீகரத்தைக் குலைத்துவிடக் கூடாது. உள்ளூர் சாதகத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்தான். ஆனால் அளவுக்கதிகமாக அதைப் பயன்படுத்துவது டெஸ்ட் ஆட்டத்தின் சவாலையும் வலிமையையும் குறைத்துவிடும்.

இப்படிக் கிடைக்கும் வெற்றியால் உருவாகும் அதீதமான தன்னம்பிக்கை புதிய சவால்களை எதிர்கொள்ளும் தயார்நிலையை நீர்த்துப்போகச் செய்யும். உள்ளூர் சாதகம் என்பது பொன் முட்டையிடும் வாத்துபோன்றது. அதைக் கவனமாகப் பயன்படுத்துவதே உள்ளூர் அணிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x