Published : 25 Mar 2021 08:33 PM
Last Updated : 25 Mar 2021 08:33 PM
புனேவில் நாளை பகலிரவாக நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை வென்று இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வொயிட்வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே டெஸ்ட் தொடர், டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், நாளைய போட்டியை வென்றால், ஒருநாள் தொடரையும் வென்று இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்யும்.
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அறிமுக வீரராகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. டி20 போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் தனது அதிரடியான ஆட்டத்தால் அணி நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பெற்றார். இதையடுத்து ஒருநாள் தொடரிலும் சூர்யகுமார் யாதவ் நாளை களமிறங்கக்கூடும்.
கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ரோஹித் சர்மாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் நாளைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் களமிறக்கப்படவும் வாய்ப்புள்ளது.
பேட்டிங் ஃபார்மில்லாமல் தவித்த ஷிகர் தவண் கடந்த போட்டியில் 98 ரன்கள் சேர்த்துள்ளதை அடுத்து மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. விக்கெட் கீப்பிங்கில் இந்தப் போட்டியிலும் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். கே.எல்.ராகுல்தான் நடுவரிசையில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் கடந்த போட்டியில் 68 ரன்களை வாரி வழங்கியதால், இந்த ஆட்டத்தில் யஜுவேந்திர சஹல் மீண்டும் வரக்கூடும். பேட்டிங் ஆல்ரவுண்டர் தேவை என்பதால், குர்னல் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்
வேகப்பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்குமார், ஷர்துல் தாக்கூர் கூட்டணி நன்றாக எடுபடுவதால், நடராஜனுக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பது கடினமாகும். ஒருவேளை இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை எனும் பட்சத்தில் நடராஜன் எடுக்கலாம். ஆனால், தாக்கூர் விக்கெட் வீழ்த்திவருவதால், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றுவிட்டால் அடுத்த போட்டியில் புவனேஷ்வர், தாக்கூருக்கு பதிலாக நடராஜன், முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதேசமயம், இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைக்க இங்கிலாந்து அணி வெற்றிக்குக் கடுமையாகப் போராடும். கேப்டன் மோர்கன், பில்லிங்ஸ் காயத்தால் நாளை ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள். ஆதலால், இருவருக்கு பதிலாக வேடிமலான், ஜோர்ட்ன் அல்லது லிவிங்ஸ்டோன் சேர்க்கப்படலாம்.
கடந்த போட்டியில் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை வீரர்கள் பயன்படுத்தாமல் சொதப்பினர். ஆதலால், இந்த முறை பேட்டிங்கை பலப்படுத்த வேறு திட்டத்தோடு இங்கிலாந்து அணி வரக்கூடும்.
கடந்த போட்டியில் மொயின் அலி, அதில் ரஷித் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை என்பதால் இருவருக்கு பதிலாக டாப்ளே, ஜேக் பால் சேர்க்கப்படலாம்.
நல்ல ஆல்ரவுண்டர் சாம் கரனை இங்கிலாந்து அணி மோசமாகப் பயன்படுத்தி வருகிறது. சாம் கரனை நடுவரிசை பேட்டிங்கில் இறக்கினால் திறமையாக பேட் செய்யக்கூடியவர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேவை என்பதால் கடுமையாக முயலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT