Published : 25 Mar 2021 04:30 PM
Last Updated : 25 Mar 2021 04:30 PM
காயத்திலிருந்து விரைவில் மீண்டு, இன்னும் வலிமையாகத் திரும்பி வருவேன் என்று இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் அய்யர் ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வலிதாங்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் துடித்து ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தோள்பட்டை எலும்பு நகர்ந்துள்ளதாகத் தெரியவந்தது.
இந்தக் காயத்திலிருந்து குணமடைந்து வர ஸ்ரேயாஸ் அய்யருக்கு சில வாரங்கள் ஆகும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்தும் முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
பிசிசிஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலும், "அடுத்துவரும் இரு ஒருநாள் போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடமாட்டார்" என்பதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் ட்விட்டரில் இன்று கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், "மிகப்பெரிய பின்னடைவு. உங்களுக்குத் தெரியும் அவர்கள் என்ன சொன்னார்கள். நான் விரைவில் வலிமையாகத் திரும்பி வருவேன். ரசிகர்கள் எனக்கு அனுப்பிய வாழ்த்துகளைப் படித்தேன், உங்களின் அன்பையும், ஆதரவையும் நினைத்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "எங்களுடைய டெல்லி கேபிடல்ஸ் அணியின் வலிமையான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விரைவில் உடல்நலம் தேறிவருவார் என நம்புகிறேன். மிகுந்த வலிமையாகத் திரும்பி வருவீர்கள் என உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்கு நீங்கள் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT