Published : 28 Nov 2015 09:35 PM
Last Updated : 28 Nov 2015 09:35 PM
நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார்.
மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது.
வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தேவையில்லை. நாக்பூர் போன்ற பிட்ச்களை போடாதீர்கள் என்கிறேன்.
பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டியைச் சேர்ந்த அனில் கும்ளே ஆகியோர் முன்னிலையில் இந்திய அணியே 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது தெரிவிப்பது என்ன?
அஸ்வின் ஒரு புத்திசாலியான பவுலர், அவர் சிறப்பாக வீச இப்படிப்பட்ட பிட்ச்கள் அவருக்குத் தேவைப்படாது. வேண்டுமானால் ஜடேஜாவுக்கு இத்தகைய விக்கெட்டுகள் தேவைப்படலாம். அஸ்வினுக்கு இந்தப் பிட்ச் அவசியமில்லை. இத்தகைய பிட்ச்கள் மூலம் அஸ்வினின் தரத்தையும் நாம் கீழிறக்குகிறோம்.
நான் ஏதோ அதிரடியாகப் பேசவில்லை. 1932-33-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை எதிர்கொள்ள இங்கிலாந்து கேப்டன் டக்ளஸ் ஜார்டைன் பாடி-லைன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அவர் வரலாற்றுக்கு பதில் அளிக்க வேண்டியதாயிற்று, அதே போல் விராட் கோலியும் இத்தகைய பிட்ச்களுக்காக பதில் அளிக்க வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் போட்டித் தன்மையை குறைக்கிறோம் நாம், இத்தகைய பிட்ச்களினால் ஆய பயன் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. திரைக்குப் பின்னாலான தீர்மானங்களினால் கோலிதான் விமர்சனங்களை எதிர்கொள்வார்” என்றார்.
தனது ட்விட்டரில், அவர், சவாலான பிட்சா? மை ஃபுட். ரயில்வே அணிக்காக டெல்லியில் இத்தகைய பிட்ச்களை உருவாக்கினார்கள். அந்த மைதானம் முதல் தர கிரிக்கெட் நடத்துவதற்கான தகுதியை இழந்தது. ஐஐசி-யிடம் அதிகாரபூர்வ புகார் அளிப்பது நிச்சயம் நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார் பேடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT