Published : 08 Nov 2015 02:23 PM
Last Updated : 08 Nov 2015 02:23 PM

டேவிட் வார்னர்-ஜோ பர்ன்ஸ் ஜோடியின் தனித்துவ சாதனை

ஆஸ்திரேலியாவின் புதிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக தனித்துவமான கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

முதல் இன்னிங்சில் வார்னர்-பர்ன்ஸ் ஜோடி 161 ரன்களைச் சேர்க்க, இதே ஜோடி 2-வது இன்னிங்சில் 37.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 237 ரன்கள் விளாசித் தள்ளினர்.

ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் தொடக்க விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்த ஒரே ஆஸ்திரேலியா தொடக்க ஜோடியாகும்.

அதே போல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிகழாதவாறு, வார்னர்-பர்ன்ஸ் ஜோடி ஒரே டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்காக சேர்ந்து எடுத்து புதிய, தனித்துவ சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களின் ரன்கள் மற்றும் சராசரி:

ஜஸ்டின் லாங்கர்- மேத்யூ ஹெய்டன் (2001-2007): 113 இன்னிங்ஸ் 5,655 ரன்கள், சராசரி 51.41.

மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லேட்டர் (1993-1999): 78 இன்னிங்ஸ் 3,887 ரன்கள்; சராசரி 51.14

பாப் சிம்சன் - பில் லாரி (1961-67) : 62 இன்னிங்ஸ் 3,596 ரன்கள்; சராசரி 59.93.

கிறிஸ் ராஜர்ஸ்-டேவிட் வார்னர் (2013-2015):

41 இன்னிங்ஸ், 2,104 ரன்கள், சராசரி 51.32.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸ் 239 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் ஜோ பர்ன்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 71 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 123 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 129 ரன்களையும், டேவிட் வார்னர் 113 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 116 ரன்கள் எடுத்தார். வார்னர் தன் முதல் இன்னிங்ஸிலும் 163 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டார்.

504 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 4-ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x