Published : 23 Mar 2021 07:36 PM
Last Updated : 23 Mar 2021 07:36 PM
குர்னல் பாண்டியா, கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டம், சதத்தைத் தவறவிட்ட தவண், கோலியின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால், புனேவில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற 318 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து ஃபீல்டிங் செய்தபோது சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் பேட்டிங் செய்வார்களா அல்லது அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான். இன்று மோர்கன் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் என்ற நிலையில்தான் இருந்தது. 250 ரன்களுக்கு மேல் தாண்டுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, கே.எல்.ராகுல் கூட்டணி சேர்ந்தபின், இங்கிலாந்து பந்துவீச்சை இருவரும் நொறுக்கி எடுத்தனர். இருவரும் சேர்ந்து் 112 ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியாக ஆடிய குர்னல் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய குர்னல் பாண்டியா அபாரமாக ஆடி அதிவேகமாக அரை சதம் அடித்தார். தனது அரை சதத்தை மறைந்த தனது தந்தைக்கு குர்னல் பாண்டியா அர்ப்பணித்தார். அதுமட்டுமல்லாமல் முதன்முதலாகக் களமிறங்கும்போது, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவைக் கட்டித்தழுவி கண்ணீர் விட்டார்.
முதல் விக்கெட்டுக்கு வந்த ரோஹித் சர்மா, தவண் கூட்டணி மந்தமான தொடக்கத்தையே அளித்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தபோதிலும், ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பவில்லை. 9-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை ரோஹித் அடித்தார். 7-வது ஓவரில் தவண் இரு பவுண்டரிகளை அடித்தார்.
12 ஓவர்களில்தான் 50 ரன்களை இந்திய அணி எட்டியது. ஆனால், ஒருபுறம் தவண் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தார்.
மந்தமாக ஆடிய ரோஹித் சர்மா 28 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த கோலி, தவணுடன் சேர்ந்தார்.
இருவரும் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சேர்ந்தபின் ஸ்கோர் ஓரளவு உயரத் தொடங்கியது. 17 பந்துகள் வரை சந்தித்த கோலி ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் கோலி இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
பேட்டிங் ஃபார்மின்றி தவித்த தவண் 68 பந்துகளில் அரை சதம் அடித்தார். விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் அடித்தார். தவண் அரை சதம் அடித்தபின்புதான் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். தவணுக்கு ரன்கள் பெரும்பாலும் லாங்ஸ்வீப் ஷாட் மூலமே கிடைத்தது.
நிதானமாக ஆடிய கோலி, மார்க் உட் பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி கணக்கில் 6 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 105 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிலைக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சசில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ராகுல், தவணுடன் சேர்ந்தார்.
சதத்தை நெருங்கிய தவண், 98 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். தவண் கணக்கில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அதில் ரஷித் பந்துவீச்சில் தவணுக்கு ஏற்கெனவே ஒரு கேட்ச் வாய்ப்பை மொயின் அலி தவறவிட்டிருந்தார். ஆனால், இந்த முறை தவண் தப்பிக்கவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா, ராகுல் ஜோடி சேர்ந்தது. 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 205 ரன்கள் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால், பாண்டியா, ராகுல் ஜோடி சேர்ந்து கடைசி 10 ஓவர்களை அடித்து நொறுக்கியது.
டி20 ஓவர்களில் கடைசி 5 ஓவர்கள் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் எவ்வாறு இருக்குமோ அதுபோல் 10 ஓவர்களைத் தங்கள் வசம் இருவரும் கொண்டு வந்தனர். 26 பந்துகளில் குர்னல் பாண்டியா அரை சதமும், 39 பந்துகளில் ராகுல் அரை சதமும் அடித்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 பந்துகளில் 100 ரன்களை எட்டினர்.
ராகுல் 62 ரன்களிலும் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்), குர்னல் பாண்டியா 58 ரன்களிலும் (2 சிக்ஸர்,7 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் உட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT