Last Updated : 22 Mar, 2021 08:34 PM

 

Published : 22 Mar 2021 08:34 PM
Last Updated : 22 Mar 2021 08:34 PM

நாளை முதல் ஒருநாள் போட்டி; தவணின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொடர்: ஷிகர், ரோஹித் ஓப்பனிங்; சூர்யகுமாருக்கு வாய்ப்பு? 

ஷிகர் தவண்: கோப்புப் படம்.

புனே

புனேவில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மாதான் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனேவில் தொடங்குகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, 3 ஆட்டங்களும் புனேவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தங்களை மாற்றிக்கொண்டு டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்ட இந்திய அணியினர், நாளை ஒருநாள் போட்டிக்கு ஏற்ப விளையாட வேண்டும்.

ஏனென்றால், 20 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்யும் போட்டியிலிருந்து 50 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யும் நிலைக்கு மாற வேண்டும் என்பதால், பேட்டிங்கில், பொறுமை, நிதானம், விக்கெட் விழாமல் விளையாடுதல் போன்றவை அவசியம்.

இந்தத் தொடர் ஷிகர் தவணுக்கு கிரிக்கெட் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தொடராகும். பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் தவண் இந்தத் தொடரில் நிரூபித்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யப்படுவார். இல்லாவிட்டால், ஷுப்மான் கில், பிரித்விஷா, இஷான் கிஷன் என ஏராளமான இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வரிசையில் காத்திருப்பதால், தவணுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

ஆனால், நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளதால், தவணுக்கான இடம் உறுதியாகியுள்ளது. ஆனால், 4-வது வரிசையில் கோலிக்கு அடுத்தாற்போல், ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குவாரா அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா எனத் தெரியவில்லை.

கேப்டன் கோலி 2019-ம் ஆண்டு மே.இ.தீவுகள் தொடரின்போது சதம் அடித்தார். அதன்பின் ஒருநாள் தொடரில் சதம் அடிக்கவில்லை. ஆதலால், இந்தத் தொடரில் ஃபார்மில் இருக்கும் கோலியின் பேட்டிங் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சூர்யகுமார் யாதவ் தற்போது இருக்கும் ஃபார்மில் நாளை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அவருக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

சுழற்பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சஹல் இருவர் இடம் பெறக்கூடும், வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன் இருவர் தவிர, தாக்கூர், பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவர் இடம்பெறக்கூடும். பிரசித் கிருஷ்ணா மீது கோலி நம்பிக்கையுடன் இருப்பதால் நாளை களமிறங்கலாம். இந்திய அணி கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கினால், குர்னல் பாண்டியா சேர்க்கப்படலாம்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை கேப்டன் மோர்கனின் பேட்டிங் முக்கியத் துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது. பட்லர், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பேட்டிங் நாளை பெரிதாக எதிர்பார்க்கப்படும்.

டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மார்க் உட் பெரும் தொந்தரவாக இருந்தார். ஆர்ச்சர் இல்லாத நிலையில், மார்க் உட்டுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் மொயின் அலி, அதில் ரஷித், லிவிங்ஸ்டன், பார்க்கின்ஸன் என 4 பேர் இருக்கின்றனர். இதில் மொயின் அலி, பார்க்கின்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x