Last Updated : 06 Nov, 2015 04:30 PM

 

Published : 06 Nov 2015 04:30 PM
Last Updated : 06 Nov 2015 04:30 PM

ஆஸ்திரேலிய ஆதிக்கத்தை உறுதி செய்த வேகப்பந்து வீச்சு: பாலோ ஆன் அச்சுறுத்தலில் நியூஸி.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 199 ரன்கள் தேவைப்படுகிறது. காரணம் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்மித் 48 ரன்களில் இன்று நன்றாக வீசிய போல்ட் பந்தில் பவுல்டு ஆக, உஸ்மான் கவாஜா 174 ரன்களையும், ஆடம் வோஜஸ் 83 ரன்களையும் எடுத்தனர். 556/4 என்ற நிலையில் வோஜஸ் சதமெடுக்க காத்திருக்காமல் டிக்ளேர் செய்தார் கேப்டன் ஸ்மித்.

நியூஸிலாந்து தனது இன்னிங்ஸை நன்றாகவே தொடங்கியது. பிரிஸ்பன் பிட்ச் பேட்டிங்குக்கு சொர்க்கம் என்பது போலவே தெரிந்தது. அவ்வப்போது மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் பந்துகள் சில நன்றாக எழும்பி விக்கெட் கீப்பரின் நெஞ்சுயரத்துக்குச் சென்றாலும், நியூஸி. தொடக்க வீரர்களான டாம் லேதம், மார்டின் கப்தில் எளிதாகவே கையாண்டனர். இருவரும் இணைந்து 56 ரன்களைச் சேர்த்தனர்.

மார்டின் கப்தில் 23 ரன்களில் டேவிட் வார்னரின் அருமையான 3-வது ஸ்லிப் கேட்சுக்கு ஹேசில்வுட் பந்தில் வெளியேறினார். ஆனால் அவரது அவுட் ஒரு மினி சரிவை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டாம் லேதம் உண்மையில் அருமையாக ஆடினார். அவரது முன்னால் வந்து ஆடும் தடுப்பாட்டம், பின்னால் சென்று ஆடும் தடுப்பாட்டம் இரண்டுமே மிகச்சிறப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தது. 3 அருமையான பவுண்டரிகளையும் அவர் அடித்தார். அதில் ஒரு அப்பர் கட் அபாரமாக இருந்தது. ஆனால் அவரது தடுப்பாட்டம் தனித்துவமாக அமைந்தது.

இந்நிலையில் அவரும் கேன் வில்லியம்சும் இணைந்து ஸ்கோரை 102 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 47 ரன்கள் எடுத்து ஆடி வந்த டாம் லேதம், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை தடுத்தாட, பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நேதன் லயனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு சூடுபிடித்தது.

இவரது விக்கெட்டையும் சேர்த்து டெய்லர், மெக்கல்லம், நீஷம் ஆகியோர் 16 ரன்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்க்கப்பட அடுத்தடுத்து அருமையான பவுலிங்குக்கு வெளியேறினர்.

ராஸ் டெய்லர் 7 பந்துகளில் ஒரு பந்தைக் கூட தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரை களவியூகம், மற்றும் அதிரடி பந்து வீச்சின் மூலம் திணறடித்தனர். கடைசியில் ஜான்சனின் ஒரு வேகமான அவுட் ஸ்விங்கர் அவரது மட்டையை முத்தமிட்டுச் சென்றது. ஸ்மித் கேட்சைப் பிடித்தார். மெக்கல்லம் ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் இருந்த போது, ஜான்சனின் மற்றுமொரு பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆக வோஜஸ் கேட்ச் பிடித்தார். ஒரு ஓவர் கழித்து ஜேம்ஸ் நீஷம் 3 ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் லெந்த் வேகப்பந்துக்கு பவுல்டு ஆனார்.

கேன் வில்லியம்சன் மட்டுமே ஒரு முனையில் உறுதியாக நிற்கிறார். அவர் 70 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 157/5. பிரிஸ்பன் பிட்சில் மீண்டும் ஒரு முறை முன் தயாரிப்பில்லாமல் வரும் எதிரணியினருக்கு ஆஸ்திரேலியா தனது ஆவேசத்தைக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x