Published : 20 Mar 2021 10:39 AM
Last Updated : 20 Mar 2021 10:39 AM
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி பெற்ற டி20 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன் சமன் செய்துள்ளார்.
அபுதாபியில் நடந்த ஜிம்பாப்பே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, தோனியின் சாதனையை அக்ஸர் சமன் செய்தார்.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.1 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த வெற்றி என்பது அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன் தலைமைக்குக் கிடைத்த 41-வது டி20 வெற்றியாகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 72 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று 41 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். அந்தச் சாதனையை அஸ்கர் ஆப்கன் சமன் செய்துவிட்டார்.
தோனி 72 போட்டிகளுக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் 51 போட்டிகளில் 41 வெற்றிகளைப் பெற்று 81.37 சதவீதம் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
தோனியின் தலைமையில் இந்திய அணி டி20 போட்டியில் 59.23 சதவீத வெற்றிகளைத்தான் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 33 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தானின் சர்பிராஸ் அகமது கேப்டன்ஷிப்பில் 29 வெற்றிகளுடன் 4-வதுஇடத்திலும் உள்ளார்.
மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சாமே தலைமையில் அந்த அணி 27 வெற்றிகளைப் பெற்று 5-வது இடத்தில் சாமே உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 3-வது இடத்தை ரஷித்கான் பெற்றார்.
தற்போது ரஷித் கான் 95 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 2-வது இடத்திலும், இலங்கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா முதலிடத்திலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT