Published : 19 Mar 2021 11:58 AM
Last Updated : 19 Mar 2021 11:58 AM
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இதில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 26-ம் தேதியும், 28-ம் தேதி 3-வது போட்டியும் நடக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் உள்ளன. வெற்றியாளரை முடிவு செய்யும் 5-வது போட்டி நாளை நடக்கிறது.
இதற்கிடைய ஒருநாள் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஒரு நாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்தத் தொடரில் மயங்க் அகர்வால், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, மணிஷ் பாண்டே, நவ்தீப் ஷைனி, சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த ஒருநாள் தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு இல்லை.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரிஷப் பந்த், குர்னால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒருநாள் தொடருக்கு அறிமுகமாக உள்ளார். 2015-ம் ஆண்டு முதல் தரப் போட்டியில் விளையாடத் தொடங்கிய பிரசித் கிருஷ்ணா ஏ தரப்போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும், 40 டி20 போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா 24 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் என இரு விக்கெட் கீப்பர்களும், சுழற்பந்துவீச்சாளர்களாக யஜுவேந்திர சஹல், குல்தீப் யாதவும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், வேகப்பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், யஜுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment