Published : 18 Mar 2021 12:58 PM
Last Updated : 18 Mar 2021 12:58 PM
சச்சின் டெண்டுல்கரின் ஆர்ப்பாட்டமான அரை சதம், யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் அரையிறுதி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய லெஜண்ட்ஸ் அணி.
முதலில் பேட் செய்த இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லாரா தலைமையிலான மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. சச்சின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த வெற்றி மூலம் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.
மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் லாராவும், இந்திய அணியின் கேப்டன் சச்சினும் போட்டி போட்டு அதிரடியாக ஆடியதைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் இரு ஜாம்பவான்களின் ஆட்டம் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது. அதிலும் சச்சின் வழக்கமான கவர் ட்ரைவ் ஷாட்கள், புல் ஷாட்கள் இன்னும் அப்படியே அமைந்திருந்தன.
மே.இ.தீவுகள் கேப்டன் லாராவின் வளைந்து நெளிந்து ஆடும் ஷாட்கள், அவரின் வழக்கமான ஆஃப் சைட் ஷாட்கள் என அனைத்தும் அற்புதமாக இருந்தது.
இந்திய அணியில் சச்சின், சேவாக் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். சேவாக் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். 5 ஓவர்களில் ஸ்கோர் 50 ரன்களை எட்டியது. 17 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் பெஸ்ட் பந்துவீச்சில் சேவாக் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த முகமது கைப், சச்சினுக்கு ஒத்துழைக்க, சச்சின் அதிரடியில் இறங்கினார். மே.இ.தீவுகள் வீரர்களின் பந்துவீச்சில் சச்சினின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறந்தன. 36 பந்துகளில் சச்சின் அரை சதத்தை நிறைவு செய்தார். இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் அடிக்கும் 2-வது அரை சதம் இதுவாகும். நிதானமாக ஆடிய கைப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த யூசுப் பதான், சச்சினுடன் சேர்ந்தார். காட்டடிக்குப் பெயரெடுத்த யூசுப் பதான், சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். பிரமாதமாக பேட் செய்து வந்த சச்சின் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யுவராஜ் சிங், பதானுடன் சேர்ந்தார்.
கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங் இந்த முறையும் அதிரடியில் இறங்கினார். நாகமூட்டோ வீசிய 19 ஓவரில் யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸர்களும், 5-வது பந்தில் மீண்டும் சிக்ஸரை விளாசினார்.
20 பந்துகளில் 49 ரன்களுடன் யுவராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். யூசுப் பதான் 20 பந்துகளில் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
20 ஓவர்களில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் டினோ பெஸ்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பெர்கின்ஸ் 9 ரன்களில் கோனி பந்துவீச்சில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு டுவைன் ஸ்மித், தியோ நரைன் இருவரும் அணியைக் கட்டமைத்து அரை சதம் அடித்தனர்.
2-வது விக்கெட்டுக்கு இருவரும் 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்மித் 63 ரன்களில் இர்பான் பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த எட்வர்ட்ஸ் டக் அவுட்டில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு தியோ நரைனுடன், லாரா ஜோடி சேர்ந்தார். மீண்டும் லாராவின் அற்புதமான ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. நரேன், லாரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்..
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. லாரா 46 (28 பந்து, 2 சிக்ஸர், 4 பவுண்டரி) ரன்களில் வினய் குமார் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பெஸ்ட் 2 ரன்களில் வினய் குமார் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சிறப்பாக பேட் செய்துவந்த தியோ நரைன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நாகமூட்டோ ஒரு ரன்னிலும், சுலைமான் பென் 2 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு மே.இ.தீவுகள் அணி 206 ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT