Published : 17 Mar 2021 07:30 PM
Last Updated : 17 Mar 2021 07:30 PM
டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல்தான் எங்களின் சிறந்த பேட்ஸ்மேன். பல தோல்விகள் வந்தாலும், உண்மையை யாராலும் மாற்ற முடியாது என்று ராகுலுக்கு ஆதரவாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேரடியான போட்டி, கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் ஏதும் பங்கேற்க முடியாமல், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற ராகுல் அடுத்தடுத்து 3 போட்டிகளிலும் 1, 0, 0 என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
பயோ பபுள் சூழலில் இருந்து நீண்ட நாட்களாகப் பயிற்சி மட்டுமே எடுத்துவந்த கே.எல்.ராகுல் திடீரென போட்டிக் களத்துக்குள் வந்து வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது சற்று சிரமமானதுதான்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதும், ஐபிஎல் டி20 தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி வென்றவர் கே.எல்.ராகுல் என்பதை மறக்க முடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர்ந்து மோசமாக ராகுல் விளையாடி வருவது வருத்தமாக இருந்தாலும், அவருக்கு கோலியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் ஆதரவாகவே இருக்கிறார்கள்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், "ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சறுக்கல் வரத்தான் செய்யும். எங்களைப் பொறுத்தவரை, டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்தான். ராகுல் சராசரியாக 40 ரன்கள் வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 145 வைத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டியில் மோசமாக ராகுல் விளையாடினார் என்பதற்காக உண்மை என்றும் மாறாது. டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் என்பதில் மாற்றமில்லை.
இந்தக் கடினமான நேரத்தில் ராகுலுக்கு நாம் ஆதரவாக இருப்பது அவசியம். நிச்சயமாக இந்தத் தொடரில் மிகவும் அருமையான இன்னிங்ஸை ராகுல் விளையாடுவார் என்று நம்புகிறேன். கே.எல்.ராகுலைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார். அவரை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர ஒரு நல்ல ஷாட் போதும். அதன்பின் ராகுல் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்.
அகமதாபாத் ஆடுகளத்தைப் பற்றிக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால்தான் அதில் ஸ்கோர் செய்வதும் எளிதாக இல்லை. சில நேரங்களில் முதலில் பேட்டிங் செய்யும்போது பவுன்ஸாகிறது, சில நேரங்களில் பந்து நின்று, அதன்பின் பவுன்ஸாகிறது. ஆதலால், இதுபோன்ற ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் என்று எதையும் குறிப்பிட முடியாது''.
இவ்வாறு விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT