Published : 14 Mar 2021 12:32 PM
Last Updated : 14 Mar 2021 12:32 PM
யுவராஜ் சிங்கின் அதிரடியான சிக்ஸர்கள், சச்சினின் அனல்பறந்த பேட்டிங் ஆகியவற்றால், ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேப்டி சீரிஸ் டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 56 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய லெஜெண்ட்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 போட்டியில் 200 ரன்களைக் குவிப்பது என்பதே வியப்பான விஷயமாக இருக்கும்போது, ஓய்வு பெற்ற வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் அனாயசமாக ஆடி அணியை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். அருமையான ஃபார்மில் இருக்கும் சச்சின், சேவாக், யுவராஜ் சிங்கை மீண்டும் இந்திய அணியில் வாய்ப்புக் கொடு்த்தாலும் பட்டையக் கிளப்புவார்கள்.
அதிரடியாக பேட் செய்த யுவராஜ் சிங் 22 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் அடங்கும். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ரோட் சேப்டி சீரிஸ் டி20 தொடரில் சச்சின் டெண்டுல்கர் முதல்முறையாக அரைசதம் அடித்தார். சச்சின், சேவாக் களமிறங்கும்போது, ரசிகர்கள், "சச்சின், சச்சின், சேவாக், சேவாக்" என்று கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர்.
கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடும்போது அகமதாபாத்தில் கூட இந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. ஏராளமான ரசிகர்கள் இந்திய லெஜெண்ட்ஸ் ஆட்டத்தைக் காண வந்திருந்தார்கள்.
ஆனால், ரசிகர்களின் உற்சாகத்துக்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் சச்சினின் ஆட்டம் அமைந்திருந்தது.
அதிரடியாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 37 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், இதில் ஒரு சிக்ஸர், 9பவுண்டரி அடங்கும்.
சேவாக் 6 ரன்னில் குர்கர் பந்துவீச்சில் வெளியேறினார். தமிழக வீரர் பத்ரிநாத் 42 ரன்கள் சேர்த்து ரிட்டயர் ஹர்ட்முறையில் வெளியேறினார்.சச்சின், பத்ரிநாத் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். யூசுப் பதான் களமிறங்கி அதிரடியாக 10 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங், கோனி கூட்டணி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினர். அதிலும் டி புரூன் வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை யுவராஜ் சிங் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங், 20-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கோனி 16 ரன்னிலும், யுவராஜ் சிங் 52 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது
205 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஆன்ட்ரூ புட்டிக், வேன் விக் ஜோடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 87 ரன்கள் சேர்த்தனர். புட்டிக் 41 ரன்னில் யூசுப் பதான் பந்துவீச்சில் போல்டாகினார்.
வேன் விக் 48ரன்னில் ஓஜா பந்துவீச்சில் சச்சி்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜான்டி ரோட்ஸ் 22 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள சேர்த்து 56 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் யூசுப் பதான் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT