Published : 13 Mar 2021 12:49 PM
Last Updated : 13 Mar 2021 12:49 PM
இந்த ஆடுகளத்தில் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடுவதில் தவறு செய்துவிட்டோம். அந்தத் தவறுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் சொதப்பியதால், தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யரின் அரை சதம், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்டம் ஓரளவுக்குக் கை கொடுத்தது.
இந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இதுபோன்ற ஆடுகளத்தில் நாங்கள் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. சில ஷாட்களை நாங்கள் ஆடியபோது சரியாக ஆடவில்லை. அது குறித்து பேட்ஸ்மேன்கள் ஆய்வு செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல. எங்களின் தவறுகளை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதிகமான தெளிவான மனதுடன், தீவிரமான எண்ணத்துடன், திட்டங்களுடன் அடுத்த போட்டியில் களமிறங்குவோம்.
இந்த ஆடுகளம் சில ஷாட்களை ஆடுவதற்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் கிரீஸை எவ்வாறு பயன்படுத்தி ஆடினார், பவுன்ஸரை எவ்வாறு தடுத்தாடினார் என்பதற்கு நல்ல உதாரணம். எங்களைப் பொறுத்தவரை பேட்டிங்கில் நாங்கள் நாங்கள் மோசமாகத்தான் செயல்பட்டோம். எங்களை இங்கிலாந்து அணி விலை கொடுக்க வைத்துவிட்டார்கள்
சில புதிய விஷயங்களைச் செய்ய முயன்றோம். ஆனால், களத்தில் உங்கள் முன் இருக்கும் சூழலை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். ஆடுகளம் நீங்கள் நினைத்த ஷாட்களை ஆடுவதற்கு ஏற்றதாக இருந்தால், திட்டமிட்டதை நிறைவேற்றலாம். ஆனால், எங்களுக்குச் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்ற பேட் செய்யவே எங்களுக்குப் போதுமான நேரம் இல்லை.
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் குறித்துக் கேட்கிறார்கள். நீண்டகாலம் தொடர்ந்து விளையாடி வரும்போது, பேட்டிங்கில் சில ஏற்றத்தாழ்வுகள் வருவது இயல்புதான். இதுபோன்ற நேரத்தில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை ஏற்க வேண்டும். உங்களுக்கான நாள் வரும்போது, நிச்சயம் அணிக்குத் தேவையானதைவிட அதிகமாக வழங்க முடியும். ஆனால், எப்போதும உங்களின் திட்டம், செயல்பாடு, எண்ணம் ஆகியவற்றை உண்மையாக வைத்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை எதையும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்''.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
விராட் கோலி, 2019-ம்ஆண்டு கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். அதன்பின் இன்னும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT