Published : 28 Nov 2015 07:40 PM
Last Updated : 28 Nov 2015 07:40 PM

தொடரும் ‘பிங்க்’ பந்து ஆதிக்கம்: விறுவிறுப்பான கட்டத்தில் அடிலெய்ட் டெஸ்ட்

அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ‘பிங்க்’ நிறப்பந்தின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று முதல் நாள் 12 விக்கெட்டுகள் விழுந்ததையடுத்து இன்று 13 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

அவுட் ஆகி வெளியேறிய நேதன் லயனை மீண்டும் அழைத்த படுமோசமான தீர்ப்பினால் ஆஸ்திரேலியா 22 ரன்கள் முன்னிலை பெற்று 116/8 என்ற நிலையிலிருந்து 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் ஒளிவெள்ளத்தின் கீழான ஸ்விங் பந்து வீச்சுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து, 94 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள், விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நாள்.

பிங்க் நிறப்பந்தின் தையல் பேட்ஸ்மென்களுக்கு சரிவர தெரியவில்லை, எனவே பேட்ஸ்மென்கள் பந்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகும் என்பதைக் கண்டறிய சிரமப்படுவதாக மைக்கேல் ஹஸ்ஸி தொலைக்காட்சியில் தெரிவித்தார். மேலும், பிங்க் பந்து ஒளிவெள்ளத்தில் அருமையாக ஸ்விங் ஆகிறது. இல்லையெனில் மரபான பேட்டிங் சாதக ஆட்டக்களமான அடிலெய்டில் இரண்டு நாட்களில் 25 விக்கெட்டுகள் சாத்தியமாகாது, அதாவது இரு சிறந்த அணிகள் மோதும் போது.

பிட்ச் பேட்டிங் செய்ய சற்றே கடினமாக உள்ளது என்பதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது. ஆனாலும் இரு அணிகளின் பேட்டிங்கும் பிட்சை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பந்துகள் நாள் முழுதும் ஸ்விங் ஆகிறது. ஆனால் பிட்சில் பந்தின் வேகமும், உயரமும் சீராகவே இருந்தது. பேட்ஸ்மென்கள் தைரியமாக ஸ்டம்புக்கு நேராக வரும் பந்துகளையே ஆடாமல் விட முடிந்தது, காரணம் நிச்சயம் பந்து ஸ்டம்புக்கு மேல் செல்லும் என்ற நம்பிக்கைதான். பிட்ச் அந்த அளவுக்கு சரியாகவே உள்ளது.

பிங்க் பந்தின் தையலை சரிவர காண முடிவதில்லை என்ற மைக் ஹஸ்ஸியின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹஸ்ஸியின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக விளக்கு வெளிச்சத்தில் இரண்டு கேட்ச்களை நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்சில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஸ்லிப்பில் கோட்டை விட்டார், அவரால் ஒருவேளை பந்தை சரிவர பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

பிங்க் பந்து சோதனை நடைபெற்று வருகிறது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தரப்பு, சானல் 9 தரப்பு, மைதானத்துக்கு இரண்டு நாட்களாக வருகை தந்துள்ள 90,000 பார்வையாளர்கள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு வெற்றி வெற்றி என்று கூச்சலிடப்படுகிறது. ஆனால் இந்தப் பரிசோதனை முயற்சி ஆஷஸ் தொடரிலும், அல்லது பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அப்படிச் செய்ய முடிவெடுத்தால் பகலிரவு டெஸ்ட், பிங்க் நிறப் பந்துகள் பற்றிய உண்மை வெளிவரலாம்.

நியூஸி.யின் அபாரப் பந்துவீச்சு:

2-ம் நாள் ஆட்டம் மதியம் தொடங்கிய போது 54/2 என்ற நிலையில் ஸ்மித் 24 ரன்களுடனும், வோஜஸ் 9 ரன்களுடனும் இறங்கினர். ஆனால், நியூஸிலாந்தின் அனைத்துப் பவுலர்களும் மிகுந்த கட்டுக்கோப்புடன், நல்ல பீல்டிங் ஆதரவுடன் முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 62 ரன்களுக்கு 6 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட், சவுத்தி அருமையான ஸ்விங் பவுலிங் செய்து ரன்களை கட்டுப்படுத்த ஸ்பின்னர்களுக்கு பந்து திரும்பியது. பீல்டிங் மிக அருமை. குறிப்பாக மெக்கல்லம் மிட் ஆஃபில் டைவ் அடித்து தடுப்பு ஒன்றைச் செய்து பந்தை பிறகு த்ரோ செய்து ஷான் மார்ஷை ரன் அவுட் ஆக்கிய விதத்தை நாம் சுட்டலாம். முன்னதாக திணறிய ஆடம் வோஜசை அருமையான பந்தின் மூலம் சவுத்தி வீழ்த்தினார். 13 ரன்களுக்கு அவர் வெளியேறினார், பந்துகள் ஸ்விங் ஆகும் போது வோஜஸுக்கு சிகப்புப் பந்து, பிங்க் பந்து என்ற வேறுபாடில்லை. அவர் இரண்டிலுமே தடுமாறக்கூடியவர் என்பதை நிரூபித்தார்.

பிரேஸ்வெல் 12 ஓவகளில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அடிலெய்ட் 2-ம் நாள் பிட்சில் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்க ஸ்பின் பந்து வீச்சாகும். ஆனால், ஸ்மித் மீண்டும் தனது திறமையை நிரூபித்து 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். கிரெய்க் பந்தில் அவர் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக மிட்செல் மார்ஷ் பிரேஸ்வெல் பந்தில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். ஸ்மித் அவுட் ஆன அதே ஓவரில் கிரெய்க், சிடில் (0) விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹேசில்வுட் 4 ரன்களில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னரிடம் பவுல்டு ஆக ஆஸ்திரேலியா 116/8 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகே நேதன் லயன் ரன் எடுக்காமல் இருந்த போது நடுவர் தீர்ப்பு எனும் அராஜகம் அரங்கேறியது, அவுட் என்று அவரே பெவிலியனுக்கு நடையைக் கட்டியவரை இந்திய நடுவர் ரவியின் நாட் அவுட் தீர்ப்பு கிரீசுக்கு அழைத்தது, ரிவியூவும் நியூஸிக்கு பின்னடைவை ஏற்படுத்த, அவர் அவுட் ஆக வேண்டிய ஷாட்டான ஸ்வீப்பை மேலும் சுதந்திரமாக ஆடி ஒரு சிக்சரையும் 3 பவுண்டரியையும் அடித்து 34 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் நெவில் கட்டுக்கோப்பாக, மிகச் சிறப்பான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி 66 ரன்களை எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

நெவில்-லயன் கூட்டணி 74 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது போட்டியின் திருப்புமுனை, இதற்குக் காரணம் நடுவர்கள். மிட்செல் ஸ்டார்க் காயத்துடன் களமிறங்கி அடிலெய்ட் ரசிகர்களை தனது அதிரடி மூலம் உற்சாகமூட்டினார். 15 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அவர் 24 ரன்களுக்கு நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியா 116/8-லிருந்து 224 ரன்கள் என்று 22 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூஸிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளையும், கிரெய்க், போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஹேசில்வுட் அபாரம்: நியூஸிலாந்து சரிவு:

பிறகு இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி ஸ்டார்க் இல்லாவிட்டாலும் ஹேசில்வுட்டிடம் திணறியது. முதலில் கப்தில் 17 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டின் விட்டுவிட வேண்டிய பந்தை ஆடி கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

லேதமும் 10 ரன்களுக்கு ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் வலையில் விழுந்தார், வெளியே சென்ற பந்தை ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்றார் பந்து எட்ஜ் ஆகி நெவிலிடம் கேட்ச் ஆனது.

மிக முக்கிய விக்கெட்டான கேன் வில்லியம்சன் (1) விக்கெட்டை மிட்செல் மார்ஷ் கைப்பற்றினார். அதே ஆஃப் ஸ்டம்ப் பந்து தொட்டார் கெட்டார்.

பிரெண்டன் மெக்கல்லம் இறங்கி 3 பவுண்டரிகளை விளாசினார் 21 பந்துகளில் 20 ரன்கள் என்று அவர் ஆக்ரோஷம் காட்ட கடைசியில் மிட்செல் மார்ஷின் ஒரு இன்ஸ்விங்கரை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தீர்ப்பை ரிவியூ செய்து பார்த்தார், ஆனால் பந்தின் உயரம் மிடில் ஸ்டம்பைத் தாக்குவதாக அமைந்தது.

ராஸ் டெய்லரும் ஆக்ரோஷம் காட்டி 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார். ஆனால் ஹேசில்வுட் ஷார்ட் ஆஃப் லெந்தில் ஓரிரு பந்துகளை வீசிவிட்டு ஒரு பந்தை ஃபுல் லெந்தாக வேகமாக ஸ்டம்புக்கு நேராக வீச டெய்லர் பந்தை மட்டையில் வாங்காமல் கால்காப்பில் வாங்கினார், எல்.பி. ஆனார்.

டெய்லருக்கு முதலில் அவர் ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன் ஒரு கேட்சை விட்டார் கேப்டன் ஸ்மித், பிறகு தற்போது நாட் அவுட்டாக இருக்கும் வாட்லிங்குக்கும் ஒரு கேட்சை விட்டார், ஆட்ட முடிவில் சாண்ட்னர் 13 ரன்களுடனும், வாட்லிங் 7 ரன்களுடனும் கிரீசில் உள்ளனர்.

ஹேசில்வுட் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 116/5 என்று 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x