Published : 12 Mar 2021 01:09 PM
Last Updated : 12 Mar 2021 01:09 PM
மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டன் பதவி வகித்து வந்த, ஜேஸன் ஹோல்டர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக கிரெய்க் பிராத்வெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மே.இ.தீவுகள் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் ராம்தின் சென்றபின், அவருக்குப் பதிலாக ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ஹோல்டர் பணியாற்றியுள்ளார். அதில் 11 வெற்றிகள், 5 டிரா, 21 தோல்விகளை மே.இ.தீவுகள் அணி ஹோல்டர் தலைமையில் சந்தித்துள்ளது. தற்போது ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் ஹோல்டர் இருந்து வருகிறார்.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிராத்வெய்ட் கேப்டனாகப் பொறுப்பேற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றார். உடல்நிலை காரணமாக இந்தத் தொடரில் ஹோல்டர் பங்கேற்கவில்லை. இந்த தொடரில் பிராத்வெய்ட் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, முழுநேரக் கேப்டனாக பிராத்வெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்பர் கூறுகையில் “ மே.இ.தீவுகள் டெஸ்ட் அணியை வழிநடத்த கிரெய்க் பிராத்வெய்ட் சரியான வீரராக இருப்பார் என நம்புகிறோம். அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிராத்வெய்ட் வீரர்களை உற்சாகப்படுத்திய விதம், வீரர்களை சிறப்பாக விளையாட வழிகாட்டியது.
இந்த கலாச்சாரம் அணிக்குள் ஒற்றுமையையும், அனைவரும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க வைக்கும்” எனத் தெரிவி்த்தார்.
பிராத்வெய்ட் நிருபர்களிடம் கூறுகையில் “ மே.இ.தீவுகள் அணிக்கு கேப்டனாக நான் நியமிக்கப்பட்டதற்கு பெருமைப்படுகிறேன். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் அணி பல சாதனைகளை படைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT