Published : 09 Nov 2015 12:00 PM
Last Updated : 09 Nov 2015 12:00 PM
19 ஆண்டுகள் மும்பைக்காக தனது ஊனையும், உள்ளத்தையும் கொடுத்து ஆடிய வாசிம் ஜாஃபர் விதர்பாவுக்கு ஆடும் போது நேற்று ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 10,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
ரஞ்சியில் ஜாபரின் சராசரி 58.14 என்பது குறிப்பிடத்தக்கது. இன்னமுமே கூட ஷிகர் தவணை விட டெஸ்ட் போட்டிகளில் நம்பகமான வீரர்தான் ஜாபர்.
81 ஆண்டுகால ரஞ்சி வரலாற்றில் 10,000 ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்திய ஒரே வீரர் வாசிம் ஜாபர் மட்டுமே.
இந்த சாதனையை நிகழ்த்த 8 ரன்கள் தேவையாக இருந்த வாசிம் ஜாஃபர், பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் வீர் பிரதாப் சிங்கை லாங் ஆஃப் பவுண்டரிக்கு மிக அழகாக அடித்து மைல்கல்லை எட்டினார்.
ஆனால், இந்த மைல்க்கலை எட்டிய ஜாபர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பிராக்யன் ஓஜா பந்தில் பவுல்டு ஆனார். 37-வயதான வாசிம் ஜாஃபர் தனது 126-வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
முன்னதாக 9,202 ரன்கள் குவித்து மும்பை வீரர் அமோல் மஜூம்தார் இந்த சாதனையை வைத்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக டெல்லியின் மிதுன் மன்ஹாஸ் 8,197 ரன்கள் எடுத்து 2-ம் இடத்தில் இருந்தார். இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்த அமோல் மஜூம்தார் ஒரு சர்வதேசப் போட்டியில் கூட ஆடியதில்லை என்பதும், வாசிம் ஜாஃபர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும், இந்திய அணித் தேர்வாளர்களின் புதிரான அணித் தேர்வுக் கொள்கையால் அரைகுறையாக முடிவுக்கு வந்ததும் விவாதத்துக்குரியது.
மொத்தமாக வாசிம் ஜாஃபர் 229 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 51 சதங்கள், 83 அரைசதங்களுடன் 17,088 ரன்கள் குவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT