Published : 08 Mar 2021 06:21 PM
Last Updated : 08 Mar 2021 06:21 PM
அகமதாபாத்தில் வரும் 12-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகக் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எந்தெந்த வீரர்கள் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பதிலும், வீரர்களைத் தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டி20 தொடருக்காக 19 வீரர்கள் இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 19 வீரர்களில் ஒவ்வொரு இடத்துக்கும் இரு வீரர்கள் தகுதியாக இருப்பதால்தான், யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது. இவர்களில் 11 பேரை எவ்வாறு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமும், சாதுரியமும் இருக்கிறது.
தொடக்க வீரர் இடத்துக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருந்தால், கே.எல். இருக்கிறார். கே.எல்.ராகுலைக் தொடக்க வீரராகவும் களமிறக்கலாம், விக்கெட் கீப்பராகப் பயன்படுத்தலாம், நடுவரிசையிலும் களமிறக்கலாம். எந்த டவுனில் களமிறங்கினாலும் டி20 போட்டியைப் பொறுத்தவரை அடித்து விளாசக்கூடியவர்.
தொடக்க வரிசையில் ஷிகர் தவணுக்கு பதிலாக ராகுலுக்கு வாய்ப்பு வழங்கினால், அதிலும் அவர் தனது முத்திரையைப் பதிக்கக்கூடியவர். ஆனால், அனுபவத்தைப் பொறுத்தவரை தவணுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதேசமயம், டெஸ்ட் தொடரில் சதம் அடித்து அருமையான ஃபார்மில் ரிஷப் பந்த் இருக்கிறார். ஆதலால், அசைக்க முடியாத இடத்தை ரிஷப் பந்த் பெற்றுவிட்டதால், நடுவரிசைக்கு அவரின் தேர்வு மறுக்க முடியாத ஒன்றாகும்.
3-வது இடத்தில் கோலி, 5-வது இடத்தில் ரிஷப் பந்த், 6-வது இடத்தில் ஹர்திக் பாண்டியா என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
சூர்ய குமாரின் சமீபத்திய பேட்டிங் அற்புதமாக இருந்து வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கும் டி20 போட்டிக்கு முக்கியமானது என்பதால், இருவரில் ஒருவரை 4-வது இடத்துக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
அதிலும் நீண்ட காத்திருப்புக்குப் பின் இந்திய அணிக்குள் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். அவரைத் தேர்வு செய்யாமல் தொடரில் அமரவைப்பது திறமையை வீணடிப்பதாகும். ஆதலால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் அணிக்குள் வந்துள்ளதால், ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா என்பதும் கேள்விக்குறிதான். சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பையில் தாக்கூர் அரை சதம் அடித்து தன்னைப் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நிரூபித்துள்ளார்.
புவனேஷ்வர், தாக்கூர் இருவருமே நன்றாகப் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர்கள். இருவரில் அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் பட்சத்தில் புவனேஷ்வர் குமாருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.
அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என்பதால், சாஹல், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் மூவரும் அணியில் இடம் பெறக்கூடும். வேகப்பந்துவீச்சில் நடராஜன், ஷைனிக்கு இடையே ஒப்பிட்டால், விதம் விதமாக யார்க்கர் வீசுதல், லைன் லென்த்தில் பந்துவீசுதல், கட்டுக்கோப்பாக ஓவரை வீசுதலில் நடராஜனுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். அதில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருப்பது இங்கிலாந்து அணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்குச் சிக்கலை உண்டாக்கும் என்பதால், நடராஜன் இடத்துக்கு ஆபத்தில்லை.
ஆனால், இளம் வீரர்கள் இஷான் கிஷன், ராகுல் திவேட்டியா ஆகியோர் வேறு வழியின்றி இந்தத் தொடரில் விளையாடும் 11 பேரில் இடம்பெறுவது மிகக் கடினம். டி20 தொடரில் முதல் 3 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றினால், அடுத்த இரு போட்டிகளுக்கு பெஞ்சில் அமரவைக்கப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
பும்ரா, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால்தான் பந்துவீச்சிலும், ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT