Published : 08 Mar 2021 05:23 PM
Last Updated : 08 Mar 2021 05:23 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அலுவலகத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, வாரியத்தில் உள்ள அலுவலர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்றவும் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. பல ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் டி20 லீக் போட்டியை ஒத்திவைத்துக் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்ட சில நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டித் தொடரை நடத்துவதற்கு வீரர்களுக்கு பயோ பபுள் சூழலை நிர்வாகத்தால் உருவாக்க முடியவில்லை என்று கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, பயோ பபுள் சூழலுக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி ஒரு குழுவை அமைத்தார்.
ஆனால், அந்தக் குழுவை அமைத்தபின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ மற்றும் அறிவியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சோஹைல் சலீம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதற்கிடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி எதிர்காலத்தில் நடத்தப்படாவிட்டால், பணத்தைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரி 7 அணி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாகப் பாகிஸ்தான் வாரியத் தலைவர் இஷான் மானி, அணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் விளையாடும் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் பயோ பபுள் சூழல் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால் வீரர்கள் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT