Published : 07 Mar 2021 04:20 PM
Last Updated : 07 Mar 2021 04:20 PM
2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 14-வது ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி விரும்பியதையடுத்து அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
இதுவரை பயோ பபுள் சூழலில் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடர், முஸ்டாக் அலி டி20 தொடர் உள்ளிட்டவை வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், ஐபிஎல் போட்டித் தொடரையும் நடத்த முடிவு செய்யப்பட்டது
இதுகுறித்து ஐபிஎல் பொதுக்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்குப் பின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''14-வது ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 8 அணிகள் மோதும் இந்தப் போட்டி 6 நகரங்களில் நடைபெறுகிறது.
மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மே 30-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியும், ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டங்களுக்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். சூழலுக்கு ஏற்ப அதன்பின் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.
ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை 4 வாரங்களில் நடக்கும் 33 ஆட்டங்களில் ஒருபோட்டி கூட கொல்கத்தாவில் நடத்தப்படாது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் நடத்தப்படுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் 4 நகரங்களில் விளையாடும் வகையில் லீக் சுற்று அமைக்கப்பட்டுள்ளது. 56 லீக் ஆட்டங்களில், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் தலா 10 ஆட்டங்கள் நடக்கின்றன. பெங்களூரு, அகமதாபாத்தில் மட்டும் தலா 8 ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்த ஐபிஎல் போட்டியின் முக்கிய அம்சம் என்னவென்றால், அனைத்துப் போட்டிகளும் எந்த அணியும் தான் சார்ந்திருக்கும் மாநிலத்தில் நடக்காமல் பொதுவான இடத்தில் நடத்தப்படுகிறது. அதாவது எந்த அணியும் அதன் சொந்த மாநிலத்தில் விளையாடப் போவதில்லை. லீக் சுற்றுகளில் ஆட்டங்கள் அனைத்தும் 4 நகரங்களில் மட்டுமே நடக்கிறது.
ஒரே நாளில் இரு லீக் சுற்றுப் போட்டிகள் 11 நாட்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றன. மாலையில் தொடங்கும் போட்டிகளில் 6 அணிகள் 3 ஆட்டங்களிலும், 2 அணிகள் 2 மாலை நேர ஆட்டங்களிலும் விளையாடுகின்றன.
இரு போட்டிகள் நடக்கும்போது மாலை 3.30 மணிக்குப் போட்டி தொடங்கும். மற்ற போட்டிகள் வழக்கம் போல் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.
கரோனா பரவல் சூழல், பயோ பபுள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அணியும் 3 முறை மட்டுமே பயணம் செய்யும் விதத்தில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்''.
இவ்வாறு பிசிசிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT