Published : 26 Nov 2015 06:18 PM
Last Updated : 26 Nov 2015 06:18 PM

எல்லா நாளுமே 5-வது நாள் பிட்ச்தானோ?: நாக்பூர் பிட்ச் பற்றி தெறிக்கும் விமர்சனங்கள்

நாக்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. கடைசியாக 310 ரன்கள் என்ற ‘இமாலய’ இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு தற்செயல் நிகழ்வு என்னவெனில் முதல் நாள் ஆட்ட முடிவிலும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருந்தனர், இன்று 2-ம் நாளும் டீன் எல்கர், ஆம்லா களத்தில் இருக்கின்றனர்.

மொஹாலி டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்தது, இந்த டெஸ்ட் போட்டியும் 3-ம் நாள் தாண்டாத நிலை உருவாகியுள்ளதையடுத்து பிட்ச் பற்றி வாசிம் அக்ரம், மைக்கேல் வான் உட்பட பல முன்னாள் வீரர்கள் கேலி தொனியுடன் சில கருத்துகளை கூறியுள்ளனர்:

மைக்கேல் வான்: இது மிகவும் கொடூரமான பிட்ச். இது 5 நாட்கள் போட்டி நீடிக்க தயாரிக்கப்பட்டது என்று கூறமுடியுமா?

கிளென் மேக்ஸ்வெல்: இந்தப் பிட்ச் கொடூரமானது; முதல் ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு, ஏனெனில் ஒவ்வொரு ஓவரிலும் 3 பந்துகள் பேட்ஸ்மென் விக்கெட்டை அச்சுறுத்துகிறது.

மேத்யூ ஹெய்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் நாம் இப்போது பார்க்கும் அளவுக்கு சீரழிந்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

வாசிம் அக்ரம்: உலகம் முழுதும் டெஸ்ட் பிட்ச்களைத் தயாரிப்பதில் ஐசிசி முனைப்பு காட்டுவது அவசியம். அல்லது அணியின் தரநிலையை பாதிக்கும் வண்ணம் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். அதுவரை இப்படிப்பட்ட பிட்ச்களை நாம் பார்த்துத்தான் தீர வேண்டும்.

தி இந்து (ஆங்கிலம்) பத்தியில் ஜாக் காலிஸ்: ஓரளவுக்கு நல்ல பிட்சில் 400 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஸ்பின்னர் ஆசைப்படுவாரா அல்லது ஒவ்வொரு எதிரணி ரன்னுமே கவலையளிப்பதாக அமையும் 200 ரன்களை வைத்துக் கொண்டு பந்து வீச ஆசைப்படுவாரா என்று கேட்டோமானால் அவர்கள் முதல் தெரிவையே விரும்புவர் என்றே நான் கருதுகிறேன்.

ராபின் பீட்டர்சன்: ஏன் டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது என்றால் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் வீரர்களின் திறமையை சோதிப்பதால்தான். இப்போது அதனை பார்க்க முடிவதில்லை.

ரோஷான் அபய்சிங்கே: நாக்பூர் பிட்ச் போல் தயாரித்தால் 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட்தான் இனிமேல். இது பார்க்க மிகவும் அவமானகரமாக உள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய்: தென் ஆப்பிரிக்கா ஸ்பின் பந்து வீச்சை ஆடமுடியாது, ஆனாலும் இது மிகவும் இழிவான பிட்ச். ஜுஹு பீச் போல் உள்ளது.

டிரெண்ட் ஜான்சன்: 215 ரன்களை எடுத்த பிறகு இந்தியா 136 ரன்கள் முன்னிலை!! ஆட்ட நடுவர்களின் அறிக்கையை படிக்க ஆசையாக இருக்கிறது.

ரிச்சர்ட் ஹைண்ட்ஸ்: தென் ஆப்பிரிக்கா 79 ஆல் அவுட். 80 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடியக்கூடிய பிட்சில் தென் ஆப்பிரிக்கா மோசமான ஆட்டம்!

டாம் மூடி: இந்த நாக்பூர் பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது. 142 ஓவர்களில் 25 விக்கெட்டுகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x