Published : 06 Mar 2021 01:57 PM
Last Updated : 06 Mar 2021 01:57 PM
அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, தினேஷ் கார்த்திக் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சதம் அடிக்க 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இசாந்த் சர்மா, முகமது சிராஜ் அடுத்தடுத்த சில பந்துகளில் ஆட்டமிழந்ததால், சுந்தர் சதம் அடிக்க முடியாமல் போனது. இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால், டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்திருப்பார்.
வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங்கை இந்திய அணி வீரரும், தமிழக அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். தினேஷ் கார்த்திக் தெரிவித்த பாராட்டு செய்தியில், " வாஷிங்'டன்' சுந்தர். நீங்கள் சதம் அடித்தவுடன் இப்படித்தான் எழுத நினைத்தேன். ஆனால், பராவாயில்லை. விரைவில் இதுபோன்ற வார்த்தையை எழுதுவேன். அற்புதமான பேட்டிங் செய்தீர்கள் சுந்தர்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் " இந்த இளைஞர் சுந்தரை நினைத்து வருத்தப்படுகிறேன். வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கத் தகுதியானவர்" எனத் தெரிவித்துள்ளார்.
2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. அஸ்வின், அக்ஸர் சுழலைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஆட்டம் போகிறபோக்கைப் பார்த்தால், இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் ஆச்சயர்பப்படுவதற்கில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT