Published : 06 Mar 2021 12:23 PM
Last Updated : 06 Mar 2021 12:23 PM
அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியைவிட 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசிவரை போராடியும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரால் சதம் அடிக்க முடியாமல் 96 ரன்களில் நாட் அவுட்டாகவே இருந்தார்.
இவருக்குத் துணையாக இசாந்த் சர்மா, முகமது சிராஜ் இருவரில் ஒருவர் கூடுதலாக இரு ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால், வாஷிங்டன் சுந்தர் தனது முதலாவது சதத்தை அடித்திருப்பார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாட்கள் முழுமையாக இருப்பதால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஆடுகளத்தை அமைத்துவிட்டார்கள் என இங்கிலாந்து முன்னாள் வீர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இந்தப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆன்டர்ஸன் 3 விக்கெட்டுகளையும் என வேகப்பந்துவீச்சாளர்கள்தான் வீழ்த்தியுள்ளார்கள்.
ஆனால், கடைசி 3 நாட்கள் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், 160 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை சுருட்டவும் இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. வழக்கம்போல், அக்ஸர் படேல், அஸ்வின், சுந்தர் மூவரின் சுழற்பந்துக் கூட்டணியும் சேர்ந்தால், இன்னிங்ஸ் வெற்றி பெற முடியும்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னணி வீரர்களான கோலி, ரஹானே, புஜாரா ஆகிய ஒருவரும் சோபிக்கவில்லை. ஆனால், 6-வது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் அடித்த சதமும், 8-வது வீரராக வந்த வாஷிங்டன் சுந்தரின் 96 ரன்களும் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 7-வது மற்றும் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது இதுவரை 2 முறைதான் நடந்துள்ளது. இப்போது மூன்றாவது முறையாக இந்திய அணி சாதித்துள்ளது.
இதற்கு முன், கடந்த 2008-ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் ஆஸ்திரேலிய அணியும், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியும் 7-வது மற்றும் 8-வது விக்கெட்டில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. அதன்பின் தற்போது இந்திய அணியில் ரிஷப் பந்த், சுந்தர், அக்ஸர் படேல் கூட்டணி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்து, 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுந்தர் 60 ரன்களுடனும், படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-ம் நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அக்ஸர் படேல் அரை சதத்தை நெருங்கிய வேளையில், 43 ரன்களில், பேர்ஸ்டோவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
8-வது விக்கெட்டுக்கு இருவரும், 106 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
வாஷிங்டன் சுந்தரும் தனது முதலாவது சதத்தை நெருங்கினார். ஆனால், துரதிர்ஷ்டமாக அடுத்துவந்த இசாந்த் சர்மா வந்த வேகத்தில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஸ்டோக்ஸ் வீசிய அதே ஓவரில் சிராஜ் டக் அவுட்டில் ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆன்டர்ஸன் 3 விக்கெட்டுகளையும், லீச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT