Published : 05 Mar 2021 05:52 PM
Last Updated : 05 Mar 2021 05:52 PM
ஆரோன் பின்ச்சின் அதிரடி ஆட்டம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால், வெலிங்டனில் இன்று நடந்த 4-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 18.5 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்து 50 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரு அணிகளும், தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அடுத்து நடக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது
இந்த ஆட்டத்தில் காட்டடி அடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 55 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 5பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்த பின்ச்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நியூஸிலாந்து அணியைத் தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சில் மிரட்டி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் ஆஸ். பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர். அந்த வகையில் கானே ரிச்சார்ட்ஸன் 3 விக்கெட்டுகளையும், அகர், ஸம்ப்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நியூஸிலாந்து சரிவுக்கு காரணமாக இருந்தனர்.
இதில் அருமையாகப் பந்துவீசிய மேக்ஸ்வெல் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் 18 ரன்கள் சேர்த்து மேக்ஸ்வெல் ஓரளவுக்கு பங்களிப்பு செய்தார்.
கடந்த போட்டி நடந்த அதே வெலிங்டன் ஆடுகளத்தில்தான் இந்தப்போட்டியும் நடந்தது. ஆடுகளம் மிகவும் கடினமாகவும், பேட்டிங் செய்ய சிரமமாகமாகவும் இருந்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணி நல்ல ஸ்கோர் செய்தால் சேஸிங் கடினமாக இருக்கும் என்பதால், ஆஸி. அணி அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தது.
அதற்கு ஏற்றார்போல், நியூஸிலாந்து அணியை தங்களின் பந்துவீச்சில் சுருட்டி ஆஸி. அணி வென்றுள்ளது. கடந்த போட்டியிலும் இதேபோன்று முதலில் பேட்டிங் செய்து 64 ரன்களில் ஆஸி அணி வென்றது நினைவிருக்கலாம்.
ஆஸ்திதரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் டி20 போட்டிகளில் 2,310 ரன்கள் சேர்த்து அதிகமான ரன்கள் சேர்த்த ஆஸி. வீரர் எனும் பெருமையைப் பெற்று, வார்னர் சாதனையை முறியடித்தார். வார்னர் 2,265 ரன்கள் சேர்த்துள்ளார்.
டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மேத்யூ வேட், பின்ச் களமிறங்கினர். தொடக்கத்திலேயே வேட்(10)ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் வெளியேறினர்.
அதன்பின் வந்த ஜோஸ் பிலிப்(13), மேக்ஸ்வெல்(18), ஸ்டாய்னிஸ்(19) ஆஸ்டன் அகர்(0), மார்ஷ்(6) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறக் களத்தில் கேப்டன் பின்ச் மட்டும் தனி ஆளாகப்போராடினார்.
100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஆரோன் பின்ச் 47 பந்துகளில் அரைசதம் அடித்து அணியைக் காப்பாற்றினார்.
கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 56 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்திக்கொண்டது. ஜேமிஸன் வீசிய கடைசி ஓவரில் ஆரோன் பின்ச் ஹாட்ரிக் சிஸ்க் உள்பட 4 சிக்ஸர்களை விளாசி 26 ரன்களைச் சேர்த்தார்.
பின்ச் 79 ரன்களுடனும், ரிச்சார்ட்ஸன் 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.
நியூஸிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் சேர்த்தனர்.
157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை சாய்த்தனர், அந்த அழுத்தத்திலிருந்து கடைசிவரை நியூஸிலாந்து அணியால் மீளமுடியவில்லை.
5-வது ஓவரில் கப்திலை(7) ரன்னில் அகர் வீழ்த்தினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 34 ரன்கள் வரை ஒருவிக்கெட்டை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 30 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கைல் ஜேமிஸன்(30) ரன்களும், ஷீபர்ட் (19) ரன்கள் சேர்த்தனர். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான வில்லியம்ஸன்(8) கான்வே(17), பிலிப்ஸ்(1), நீஷம்(3), சான்ட்னர்(3) சவுதி(6) என வரிசையாக வெளியேறினர்.
மேக்ஸ்வெல், கானே ரிச்சார்ட்ஸன், ஆடம்ஸம்பா, அகர் ஆகியோரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.
அதிலும் ஆஸ்டின் அகர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிச்சராட்ஸன் 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
18.5 ஓவர்களில் 106 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT