Published : 05 Mar 2021 12:29 PM
Last Updated : 05 Mar 2021 12:29 PM
ஸ்டோக்ஸ், ஆன்டர்ஸன் ஆகியோரின் பந்துவீச்சில் அகமதாபாத்தில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
2-வது நாளான இன்று உணவு இடைவேளைக்கு செல்லும்போது, 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி. இன்று காலை செஷனுக்குள் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது.
இன்று காலை ஆட்டம் தொடங்கியதற்குள் 54 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கும், ரன்கள் சேர்ப்பதற்கும் மிகவும் கடினமாக இருப்பதால், இந்திய வீரர்களும் திணறுகின்றனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடும் நிலையைப் பார்த்தால், இங்கிலாந்து அணியின் ஸ்கோரைவிட முன்னிலை பெறுவதே கடினமாக இருக்கும் எனத் தெரிகிறது. நல்ல பாட்னர்ஷிப் மட்டும் அமைந்துவிட்டால் ஸ்கோர் உயர்ந்துவிடும். ஆனால், இதுவரை எந்தவிக்கெட்டுகளுக்கும் இடையே பாட்னர்ஷிப் அமையாதது அணியை பலவீனமடையச் செய்து வருகிறது.
முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி(0), புஜாரா(1), ரஹானே(27) ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் ரோஹித் சர்மா மட்டும் 32 ரன்களுடன் களத்தில் போராடி வருகிறார்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸை நேற்று ஆடிய இந்திய அணி நேற்றையஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஹித் சர்மா 8 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இருவரும் 2-ம்நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர். ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில், புஜாரா 17 ரன்னில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து கேப்டன் கோலி களமிறங்கினார். 8 பந்துகளை மட்டும் சந்தித்தநிலயில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கோலி டக்அவுட்டில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரஹானே, ரோஹித்துடன் இணைந்தார். ரோஹித் சர்மா வழக்கத்துக்கும் மாறாக தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் போல நிதானமாக ஷாட்களை ஆடினார். ஆனால், ரஹானே அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
ரஹானே 37 ரன்கள் சேர்த்த நிலையில், ஆன்டர்ஸன் அருமையான ஸ்விங் பந்துவீச்சில் ஸ்லிப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 39 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT