Published : 04 Mar 2021 07:28 PM
Last Updated : 04 Mar 2021 07:28 PM
அகமதாபாத்தில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடையே சூடான வாக்குவாதம் நடந்தது. அதன்பின் நடுவர் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.
அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியை டிரா செய்தாலோ அல்லது வென்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆதலால், இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டியாகும்.
அதேசமயம், இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் இந்திய அணியை வீழ்த்தினால், தொடரையும் சமன் செய்ய முடியும், பைனலுக்கு இந்திய அணி செல்வதை தடுக்க முடியும். ஆதலால், இரு அணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்த சூழலில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தின் 13-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார், பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். சிராஜ் பவுன்ஸராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து, முகமது சிராஜ் நேரடியாக கேப்டன் கோலியிடம் சென்று ஸ்டோக்ஸ் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கேப்டன் கோலி நேரடியாக, ஸ்டோக்ஸிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் சூடானதையடுத்து, நடுவர் நிதின் மேனன் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து முகமது சிராஜ் போட்டி முடிந்தபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் 13-வது ஓவரை வீசினேன். ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். பவுன்ஸராக வீசியதைத் தாங்க முடியாத ஸ்டோக்ஸ் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, நான் கேப்டன் கோலியிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக ஸ்டோக்ஸிடம் சென்று எனக்காகப் பேசினார். வாக்குவாதம் நடந்தது உண்மைதான் , ஆனால், அந்த சம்பவத்தை விராட் கோலி அருமையாகக் கையாண்டார். இதுதான் களத்தில் நடந்தது" எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, சிட்னியில் நடந்த போட்டியில் அங்குள்ள ரசிகர்கள் ஜஸ்பிரித் பும்ராவையும், முகமது சிராஜையும் இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளில் பேசினர். இது தொடர்பாகா சிராஜ், ரஹானே அளித்த புகாரை விசாரித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவ்வாறு நடந்தது உண்மைதான் என விசாரணையில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT