Published : 05 Nov 2015 03:22 PM
Last Updated : 05 Nov 2015 03:22 PM

நியூஸிலாந்து பந்துவீச்சை புரட்டி எடுத்த வார்னர், கவாஜா: ஆஸ்திரேலியா 389/2

பிரிஸ்பன் மைதானத்தில் இன்று தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 389 ரன்கள் குவித்தது. வார்னர், கவாஜா சதமெடுக்க தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 71 ரன்கள் எடுத்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் உஸ்மான் கவாஜா 102 ரன்களுடனும், கேப்டன் ஸ்மித் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தாலும் பிரிஸ்பன் பிட்ச் வழக்கம் போலவே ஓரளவுக்கு நல்ல பவுன்ஸையும் ஸ்பின்னர் மார்க் கிரெய்குக்கு ஓரளவுக்கு உதவியும் புரிந்தது. ஆனால் நியூஸிலாந்து பந்து வீச்சு படு மோசமாக அமைந்தது. டிரெண்ட் போல்ட், நீஷம், பிரேஸ்வெல், மார்க் கிரெய்க் என்று அனைவரும் ஓவருக்கு 4 ரன்களுக்கும் மேல் சராசரியாக விட்டுக் கொடுத்தனர்.

நியூஸிலாந்து பவுலர்கள் அனைவரும் நிறைய மோசமான பந்துகளை வீசினர். அமைக்கப்பட்ட களவியூகத்துக்கு ஏற்ப பவுலர்கள் வீசவில்லை. மேலும் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லமும் ஒருநாள் போட்டி போல் களவியூகத்தை அடிக்கடி மாற்றி பவுலர்களை செட்டில் ஆக விடாமல் செய்தார். இவையெல்லாம் சேர்ந்து ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை புரட்டி எடுக்கச் செய்தது. ஒரேநாளில் 389 ரன்கள், இதற்கு முன்னர் 2002-03 ஆஷஸ் தொடரில் ஒரே நாளில் 2/364 எடுத்தது ஆஸ்திரேலியா, அதனை தற்போது உடைத்தது.

3-வது முறையாக ஒரு சீசனின் முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக வார்னர் சதம் எடுத்துள்ளார். மேலும் தனது 44-வது டெஸ்ட் போட்டியில் 13-வது சதத்தை எடுத்தார் வார்னர். இதன் மூலம் இதே டெஸ்ட் போட்டிகள் எண்ணிக்கையில் இவ்வளவு சதம் எடுத்த வகையில் கிரெக் சாப்பல், ஜாவேத் மியாண்டட் சாதனைகளை சமன் செய்ததோடு, இதே 44 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் (10), ராகுல் திராவிட் (9), பாண்டிங் (7) ஆகியோரது சத சாதனைகளையும் முறியடித்தார்.

தொடக்கத்திலேயே பந்துவீச்சு சரியான இடங்களில் வீசப்படாததால் பர்ன்ஸ் (71), வார்னர் ஜோடி 161 ரன்களை சேர்த்து நியூஸிலாந்துக்கு எதிராக புதிய தொடக்க சாதனையை படைத்தனர். ஆனால் வார்னருக்கும் நெருக்கடி தருணங்கள் இல்லாமலில்லை. 7 ரன்களில் இருந்த போது போல்ட் யார்க்கர் ஒன்று அவரை நிலைதடுமாறச் செய்தது. 69-ல் ஒரு எட்ஜ் எடுத்தது, ஆனால் கேட்சாக மாறவில்லை. அவர் அடித்த 21 பவுண்டரிகளில் முதல் பவுண்டரியை அடிக்க 20 பந்துகள் எடுத்துக் கொண்டார் வார்னர். ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் இருந்த போது மெக்கல்லமின் த்ரோ ஸ்டம்பைத் தாக்கியிருந்தால் ரன் அவுட் ஆகியிருப்பார்.

பிரேஸ்வெல், கிரெய்க் ஆகிய ஸ்பின்னர்களை அறிமுகம் செய்தவுடன் பர்ன்ஸ் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அவர் 120 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து சவுதீ பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு கவாஜா, வார்னர் ராஜ்ஜியம்தான். பர்ன்ஸ் ஆட்டமிழக்கும் போது 82 ரன்களில் இருந்த வார்னர் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 141 பந்துகளில் சதம் கண்டார். கவாஜாவுக்கும் ஆட்டம் அருமையாக கைகொடுக்க அவர் 60 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அரைசதம் எட்டினார்.

பிறகு வார்னர் 150 ரன்களை 212 பந்துகளில் எட்டினார். வார்னர் கடைசியில் 224 பந்துகளில் 19 பவுண்டரி 1 சிக்சருடன் 163 ரன்கள் எடுத்து நீஷம் பந்தில் ராஸ் டெய்லரின் அபார கேட்சுக்கு அவுட் ஆனார். வார்னர், கவாஜா ஜோடி 150 ரன்களை 2-வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். கவாஜா 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 பந்துகளில் தனது டெஸ்ட் முதல் சதத்தை எடுத்து நாட் அவுட்டாக களத்தில் இருக்கிறார்.

கேப்டன் ஸ்மித் 54 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். நியூஸிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் 19 ஓவர்களில் 90 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. சவுதி மட்டுமே 3.31 என்ற சிக்கனவிகிதத்தில் வீசினார். மற்றெல்லோருக்கும் இன்று சாத்துமுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x